2கே கிட்ஸ் அதிகமாக ஆபாசப் படம் பார்ப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொல்வது ஏன்?




 


-நந்தினி வெள்ளைசாமி-


’ஜென் இசட்’ எனப்படும் 2,000களின் தொடக்கத்தில் பிறந்த ‘2கே கிட்ஸ்கள்’ அதிகமாக ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும் அதற்காக அவர்களைத் தண்டிக்காமல் முறையாகத் தெளிவுபடுத்தி அவர்களை சமூகம் மீட்க வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


அம்பத்தூர் காவல் நிலையத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக, அவர் மீது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (போக்சோ) மற்றும் தொழில்நுட்பச் சட்டப் (ஐ.டி. சட்டம்) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, அந்த இளைஞர் தாக்கல் செய்த மனு மீதான சமீபத்திய விசாரணையின் போதுதான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இந்த கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.


அந்த இளைஞர் ஆபாச காணொளிகளைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் எடுத்துக்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.


போக்சோ சட்டம், 2012 பிரிவு 14(1)-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துவது குற்றம் என, இந்த வழக்கின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஐ.டி. சட்டம், 2000, பிரிவு 67(பி)-ன் படி, குழந்தைகள் தொடர்பான ஆபாச காணொளிகளை உருவாக்குவதோ, பரப்புவதோ, வெளியிடுவதோ குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி, அவர் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.



நீதிபதி கூறியது என்ன?

2கே கிட்ஸ்: ஆபாசப் படங்களை அதிகமாக பார்ப்பது ஏன்? அவர்களை எப்படி மீட்பது?பட மூலாதாரம்,WWW.HCMADRAS.TN.NIC.IN

இந்த வழக்கு தவிர்த்து ஜென் இசட் தலைமுறை குழந்தைகளிடையே மொபைல், இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவர்கள் ஆபாசப் படங்கள், காணொளிகளைப் பார்ப்பது அதிகரித்துள்ளதாக நீதிபதி தெரிவித்திருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் வெளியான ஆய்வில், 18 வயதுக்கு உட்பட்டவர்களுள் 10இல் 9 சிறுவர்களும், 10இல் 6 சிறுமிகளும் ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும் இதனால் அவர்களுக்கு உடல், மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.


“ஆண் ஒருவர் ஆபாசப் படம் பார்க்க முதலில் பழகுவது தனது 12வது வயதில்தான். 12 வயது முதல் 17 வயது வரையுள்ள பதின்பருவ சிறுவர்கள்தான் ஆபாசப் படங்களுக்கு அடிமையாகும் அபாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். சுமார் 71% பதின்பருவத்தினர் தங்கள் பெற்றோரிடம் இருந்து மறைக்கும் வகையிலான ஆன்லைன் செயல்களைச் செய்கிறார்கள்,” என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.



ஆபாசப் படங்களால் ஏற்படும் தவறான புரிதல்

ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,

பதின் பருவத்தினர் ஆபாசப் படங்களுக்கு அடிமையாவது ஏன், அதை எப்படித் தடுப்பது என்பது குறித்து, சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் சுவாதிக்கிடம் பேசினோம்.


”பதின் பருவத்தில் உடலுறவு குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். முன்பு, உடலுறவு சார்ந்த புத்தகங்கள், சி.டி-க்கள் வாயிலாகப் பார்த்தனர். இப்போது இணையம் வாயிலாகப் பார்க்கின்றனர். முன்பு போன்று அல்லாமல் அவற்றைப் பார்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அது சார்ந்த காணொளிகள் எளிதாகக் கிடைப்பது இதற்கு முக்கியக் காரணம் என்றார்.


ஆபாசப் படங்கள் பார்ப்பதைவிட அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்தான் அதிகம் என்கிறார் அவர். ஆபாசப் படங்கள் பொதுவாகவே உடலுறவை மிகைப்படுத்தியே காண்பிக்கும் என்பதே மனநல ஆலோசகர்கள், பாலியல் நல மருத்துவர்களின் கூற்றாக இருக்கிறது.


எனவே, மிகையாகக் காட்டப்படும் சில விஷயங்களை பதின்பருவத்தினர் உண்மை என நினைத்துக்கொள்வார்கள் என்றும் எதிர்காலத்தில் ஆபாசப் படங்களில் காட்டப்படுவது போன்றே தன் துணையும் இருக்க வேண்டும், உடலுறவில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்க்கும் ஆபத்து இருப்பதாக சுவாதிக் தெரிவித்தார்.


குறிப்பாக, ஆபாசப் படங்களில் சட்டத்திற்குப் புறம்பான உறவுகளையே பெரும்பாலும் காட்டுவதாகக் கூறும் அவர், இதனால் எதிர்காலத்தில் தன் துணை மீது சந்தேகம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.


BTS இசைக்குழுவை காண தனியே தென் கொரியா செல்ல துணிந்த தமிழக சிறுமிகள் - அதில் அப்படி என்ன சிறப்பு?



எப்படி தடுப்பது?

சென்னை உயர் நீதிமன்றம்பட மூலாதாரம்,

”பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கற்றுத்தர வேண்டும். பாலியல் கல்வி மீதான தவறான புரிதலைக் களைய வேண்டும். மேலும், பெற்றோர் - குழந்தைகள் உறவு சீராக இருந்தால் குழந்தைகள் இதுதொடர்பாக வீட்டிலேயே பேச முடியும்.


அவர்களுக்குள் உறவு சரியாக இல்லையென்றால் அவர்களிடமிருந்து மறைத்து அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம்,” என்றார் சுவாதிக். குழந்தைகளுக்கு பாலியல், பாலுறுப்புகள் குறித்த சரியான புரிதல்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.


ஆபாச படங்கள் பார்ப்பதிலிருந்து மீண்ட மாணவர்

தான் ஆபாச படங்களுக்கு அடிமையாகிவிட்டதாக பதின்பருவத்தினர் கண்டறிவது எப்படி என்பதை அவர் விளக்கினார்.


”தூக்கம், பசி, கல்வி இவற்றில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். மன அழுத்தம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். ஆபாசப் படங்களை பார்க்கவில்லையென்றால் அந்த நாளே பூர்த்தியடையாதது போன்று சிலருக்குத் தோன்றும். அவற்றைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவார்கள்,” என்கிறார் சுவாதிக்.



ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா காலத்தில் மொபைல் பயன்பாடு அதிகரித்ததால், ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிவிட்ட சிறுவர்கள் பலர் தன்னிடம் மனநல ஆலோசனைக்கு வருவதாக அவர் கூறுகிறார். அப்படி, 11 அல்லது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அதிலிருந்து தன்னால் மீள முடியாமல் தன் பெற்றோரின் துணையுடனேயே தன்னிடம் வந்ததாகத் தெரிவிக்கிறார் சுவாதிக்.


“அந்த மாணவர் மொபைல் பார்க்கவில்லையென்றால் எரிச்சலாகிவிடுவார். அவர்களிடம் ஆபாசப் படங்கள் சார்ந்த வணிகம் எப்படி தார்மீக பொறுப்பற்று இயங்குகிறது, அதில் குழந்தைகள், பெண்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை எடுத்துக் கூறினோம்.


எடுத்தவுடனேயே அவரிடமிருந்து மொபைலை பிடுங்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்க அறிவுறுத்தினோம். இப்போது முழுவதும் அதிலிருந்து மீண்டுள்ளார்,” என்றார்.


ஆபாசப் படங்களுக்கு அடிமையாவது ஏன்?

ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES

சிலர் அதிலிருந்து விடுபட முடியாமல் குற்ற உணர்வில் இருப்பார்கள் என்றும் அவர்களை மீண்டும் அவமதித்து, குற்ற உணர்வை அதிகரிக்காமல் நல்ல முறையில் ஆலோசனை வழங்கி கவுன்சிலிங்கிற்கு அழைத்து வர வேண்டும் என்றும் கூறுகின்றனர் மன நல ஆலோசகர்கள்.


ஆபாசப் படங்களுக்கு பலரும் அடிமையாவது ஏன் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கினார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கிருபாகர்.


”மது, புகைப் பழக்கம் என எந்த அடிமைப்படுத்தும் பழக்கமாக இருந்தாலும், அதில் ஒரு போதை இருக்கும். எல்லா போதைப் பழக்கங்களின் போதும் நம் மூளை டோபமின் என்னும் ’மகிழ்ச்சி ஹார்மோனை’ வெளியிடும்.


அதனால் தான் நாம் அவற்றுக்கு அடிமையாகிறோம். அதுதான் ஆபாசப் படங்களைப் பார்க்கும்போதும் நிகழ்கிறது. அதனால்தான் பலரும் அவற்றை திரும்பத் திரும்பப் பார்க்கின்றனர்,” என்றார்.


ஆப்கன்: 'குழந்தைக்கு உணவளிக்க முடியாவிட்டல் விஷம் கொடுக்கச் சொல்கிறார்கள்'

28 டிசம்பர் 2023

அமோனியா கசிவு: நள்ளிரவில் கதவைத் தட்டி காப்பாற்றியது யார்? 8 கிராமங்களில் என்ன நடந்தது?

27 டிசம்பர் 2023

அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அல்லாமல், சில கண்காணிப்புகளைப் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கிருபாகர்.


“அரசு கொள்கையளவில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். குழந்தைகளுக்கு சொந்தமாக மொபைல் வாங்கி தருவதற்கென ஒரு வயது இருக்கிறது. மேலும், தங்கள் மொபைல்களில், குழந்தைகள் சில உள்ளடக்கங்களைப் பார்க்க முடியாத வண்ணம் அமைப்புகளை பெற்றோர் மாற்றி வைத்திருக்க வேண்டும்,” என்றார் கிருபாகர்.


ஆபாசப் படங்களுக்கு குழந்தைகள் அடிமையாவதைத் தடுக்க அவர்களை மாற்று வழிகளை நோக்கித் திருப்ப வேண்டும் என்கிறார், குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன்.


”கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் ஆன்லைன் கல்வியை நெறிப்படுத்தாமல் பயன்படுத்தி வந்தோம். இணைய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காமலேயே இணைய கல்வியைப் பயன்படுத்தினோம். கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகாவது இவற்றைச் செய்திருக்க வேண்டும்,” என்றார், தேவநேயன்.


'உயர்மட்ட குழு தேவை'

ஆபாசப் படம் பார்க்கும் பதின்பருவத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆபாச வலைதளங்கள் 90 சதவீதம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் பதிவு செய்யப்பட்டதாக உள்ளதால், அவற்றை இந்தியாவில் தடை செய்வது பெரும்பாலும் சவாலாகவே உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.


”குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்ப்பதைத் தடுக்க கல்வித்துறையில் உயர்மட்டக் குழு அமைத்து நடைமுறை வாழ்வில் என்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதை ஆலோசிக்க வேண்டும்.


இந்தக் குழு அவ்வப்போது சந்தித்து காலத்திற்கு ஏற்ப புதுமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பதை உணர்த்த வேண்டும்.


மாற்றாக, விளையாட்டு, கலை, வாசிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்த வேண்டும். அதை நவீன குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் செய்ய வேண்டும். ’கலாசார காவலராக’ இல்லாமல் அதை முறைப்படுத்த வேண்டும்,” என்றார் தேவநேயன்.