11 பந்துகளில் 0 ரன், 6 விக்கெட்




 


கேப்டவுனில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்டின் முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 55 ரன்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணியை ஆல் அவுட்டாக்க இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்கள் மற்றும் இரண்டு மணி நேரமே தேவைப்பட்டது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


முதல் டெஸ்டில் வெறும் மூன்றே நாட்களில் சரணடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டை சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்க அணி எடுத்த 55 ரன்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்.


முதல் இன்னிங்சில் இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்காவும் பந்துவீச்சில் பதிலடி கொடுத்தது. சிறப்பாக இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த நிலையில், அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?


இந்திய அணியில் அஸ்வின் நீக்கம்

பாக்சிங் டே டெஸ்டில் தோற்றுவிட்ட இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெல்ல முனைப்பு காட்டுகிறது. இந்திய அணியில் முழு உடல் தகுதியை எட்டிவிட்ட ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், முதல் டெஸ்டில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டார்.


தென் ஆப்ரிக்க அணியில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் பெற்றார். லுங்கி நிகிடி அணிக்குத் திரும்பினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷவ் மகராஜ் தனது 50-வது டெஸ்டை விளையாடுகிறார். தென் ஆப்ரிக்க அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் விளையாடுகிறது.


இந்தியா அசத்தல் தொடக்கம்

கேப்டவுனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ் ஜோடி புதிய பந்தில் கலக்கலாக பந்துவீசி தென் ஆப்ரிக்க வீரர்களை திணறடித்தது.


பும்ரா 142 கி.மீ. வேகத்தில் இன்ஸ்விங்கர்களை வீச, மறுபுறம் முகமது சிராஜ் துல்லியமாக பந்தை பிட்ச் செய்தார். நான்காவது ஓவரில் ஆஃப் ஸ்டம்பிற்குள் பந்தை அவர் ஆங்கிள்-இன் செய்ய மார்க்ராம் விளையாடியே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது. அவர் சற்று தாமதமாக ஆட, பந்து வெளிப்புற விளிம்பில் முத்தமிடு பின்னே செல்ல இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக டைவ் அடித்த கேட்ச் செய்தார். எய்டன் மார்க்ரம் 2 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார்.


55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் பந்துவீச்சில் சரிந்த தென் ஆப்ரிக்கா

மார்க்ரம்மை காலி செய்த பிறகு, சிராஜ், கடந்த டெஸ்டில் சதம் அடித்து இந்தியாவை தோல்விக்கு தள்ளிய டீன் எல்கர் விக்கெட்டிற்கு குறி வைத்தார். எல்கரின் ஸ்டம்புகளையும் உடலையும் நோக்கி சிராஜ் பந்துவீசினார். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே டீன் எல்கருக்கு எட்ஜ் ஆகி பந்து மிட்விக்கெட்டுக்கு மேல் பறந்தது.


இம்முறை, சிராஜ் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை டீன் எல்கர் அடித்தாட முற்பட்டார். அவரது பேட்டில் பின்புறம் பட்ட பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி 8 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது.


தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்க அணி, அந்த அதிர்ச்சியில் இருந்து கடைசி வரை மீளவே இல்லை. 8 ரன்னுக்கு 2வது விக்கெட்டை இழந்த தென் ஆப்ரிக்கா, மேலும் 7 ரன்களை எடுப்பதற்குள்ளாக அடுத்த 2 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா தன் பங்கிற்கு அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்சை பெவிலியனுக்கு அனுப்ப, ஷோர்ஜியை சிராஜ் அவுட்டாக்கினார்.


55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

இதன் பிறகு தென் ஆப்ரிக்க வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஒருவர் கூட களத்தில் நிலைக்கவிலைலை. இதனால் தென் ஆப்ரிக்க அணி 55 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்னான் 15 ரன்கள் எடுத்தார்.


தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்களும் இரண்டு மணி நேரமுமே தேவைப்பட்டன. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


பும்ராவுக்கு பிறகு 2-வது வீரர் சிராஜ்

2016-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் முகமது சிராஜ் ஆவார். முன்னதாக, ஜஸ்பிரித் சிங் பும்ரா இதனை சாதித்துள்ளார். சர்வதேச அளவில் டிரென்ட் போல்ட் (2 முறை), வெர்னான் பிலாண்டர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பிறகு 5-வது வீரர் சிராஜ் ஆவார்.


55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா அதிரடி தொடக்கம்

தென் ஆப்ரிக்காவை 55 ரன்னுக்கு சுருட்டிய உத்வேகத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். தென் ஆப்ரிக்க அணிக்காக முதல் ஓவரை நிகிடி வீசினார். காயத்தில் இருந்து மீண்டு ஓராண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் ஆடும் அவர் இரண்டாவது பந்தையே நோபாலாக வீசினார்.


அடுத்த இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா, அந்த ஓவரின் கடைசிப் பந்திலும் பவுண்டரி அடித்தார். இதனால் முதல் ஓவரில் மட்டும் இந்திய அணி 13 ரன்களை திரட்டியது.


இளம் வீரர் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

இந்திய அணி முதல் இன்னிங்சை உற்சாகமாக தொடங்கிய நிலையில், ரபாடா வீசிய மூன்றாவது ஓவரில் முதல் பந்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். 7 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.


அடுத்து வந்த ஷூப்மன் கில், கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இருவருமே அதிரடி காட்டியதால் இந்திய அணியின் ரன் ரேட் 6-க்கும் அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந்தது. இதனால், 9.4 ஓவர்களிலேயே தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 55 ரன்களைக் கடந்து இந்திய அணி முன்னிலை பெற்றது.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

ரோகித் 39 ரன்களில் அவுட்

அதிரடியாக விளையாடி அசத்திய ரோகித் சர்மா அணியின் ஸ்கோர் 72ஆக இருந்த போது ஆட்டமிழந்தார். பர்கர் வீசிய பந்தில் ஜேன்சனிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்தார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் கோலியும் அதிரடியாகவே ஆடினார்.


சுப்மன் கில் - கோலி ஜோடி இந்திய அணியை 100 ரன்களை எளிதாக கடக்கச் செய்தது. 19.5 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

கில், ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து அவுட்

கில் - கோலி ஆகிய இருவருமே அபாரமாக ஆடியதால் இந்திய அணி வலுவான முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கில் விக்கெட்டை பர்கர் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்ரேயாசை தனது அடுத்த ஓவரில் பர்கர் சாய்த்தார். ஸ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.


அதன் பிறகு கே.எல்.ராகுல் களம் புகுந்தார். கோலியுடன் கைகோர்த்த ராகுல் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நிதானமாக ஆடினார். இதனால், அணியின் ரன் ரேட் மந்தமானது.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

பூஜ்யம் ரன்னுக்கு 6 விக்கெட்

வலுவான முன்னிலையை நோக்கி முன்னேறிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்திருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 33 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்த கே.எல்.ராகுல் நிகிடி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வெர்ரேனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.


அதன் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. ஸ்கோர் போர்டில் ஒரு ரன் கூட ஏறாத நிலையில், விக்கெட் மட்டும் மளமளவென சரிந்தது. ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கு நடுவே கோலி 46 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார்.


4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்த இந்திய அணி அதன் பிறகு 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்அவுட் ஆயினர்.


இந்திய அணி 153 ரன்களில் ஆல்அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்காவை விட இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா, நிகிடி, பர்கர் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ்

முதல் இன்னிங்சில் 98 ரன் பின்தங்கிய நிலையில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மார்க்ரம் ஒருபுறம் நிலைத்து நிற்க மறுபுறம் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். டீன் எல்கர் 12 ரன்களிலும், டோனி டி ஷோர்ஜி 1 ரன்னிலும், அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் வரிசையாக ஆட்டமிழந்தனர்.


முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் அசத்தலாக பந்துவீசிய சிராஜூக்கு இன்னும் விக்கெட் கிடைக்கவில்லை.


முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இந்திய அணியைக் காட்டிலும் இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால், தற்போதைய நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் கை சற்று ஓங்கியுள்ளது என்றே சொல்லலாம்.


கேப்டவுன் மைதானத்தில் முதல் நாளிலேயே, அதாவது ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் சரிந்துள்ளன.


இந்தியா vs தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,GETTY IMAGES

வரலாற்றில் இதுவே முதன் முறை

இந்த டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் இழந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணியோ கடைசி 11 பந்துகளில் இந்த 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது.


நூறாண்டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடந்துள்ள 2,522 போட்டிகளிலும் ஒருமுறை கூட இதுபோன்று நிகழ்ந்ததே இல்லை என்கிறது ஈ.எஸ்.பி.என். கிரிக்இன்ஃபோ வலைதளம். இந்திய அணி தான் முதன் முறையாக ஒரு ரன் கூட எடுக்காமல், அதாவது பூஜ்யம் ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை தாரை வார்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்கு இது மோசமான சாதனையாகும்.


இந்தியா சாதனை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 9.4 ஓவர்களில் முன்னிலை பெற்றது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு விரைவில் முன்னிலை பெறுவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பாக, 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்க்கு எதிராகவும், 2013-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் 11.2 ஓவர்களில் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா முன்னிலை பெற்றதே சாதனையாக இருந்து வந்தது. அந்த இரு போட்டிகளும் இதே கேப்டவுன் மைதானத்தில் தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தென் ஆப்ரிக்க அணியால் மீண்டு வர முடியுமா?

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டை வென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். தென் ஆப்ரிக்க அணியால் முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியுமா?