சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் 109 .5அடி- சகல வான் கதவுகளும் திறப்பு




 



வி.சுகிர்தகுமார் 0777113659  

 அம்பாரை மாவட்டத்தில் தொடர் அடை மழை பெய்துவரும் நிலையில் 110 அடி கொள்ளளவு கொண்ட சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் 109.5 அடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சகல வான் கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் 5.5 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இதற்கும் மேலதிகமாக மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 950 கியுசெக் நீரும் சேர்த்து 6140 கியுசெக் நீரும் கல்லோயா ஆற்றிலிருந்து விடுவிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல குளங்களிலும் நீர் நிரம்பி வருவதுடன் சாகாமம் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து ஸ்பீல் ஊடாக வழிந்தோடுகின்றது.
சாகாமம் பிரதான வீதியின் நீத்தை ஆற்றின் அருகில் மதகு மீதாக வெள்ளம் பாய்ந்துவரும் நிலையில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இதனால் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பிரதேச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் வயல் நிலங்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில் தனவந்தர்கள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் சின்னமுகத்துவாரம் உள்ளிட்ட நீர் வடிந்தோடும் பிரதேங்களை பார்வையிட்டதுடன் கிராமங்களின் நிலை தொடர்பிலும் நேரில் கண்டறிந்து கொண்டு மாவட்ட செயலகத்திற்கு தகவல்களை வழங்கியுள்ளார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் தனவந்தர்கள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவை வழங்கும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்