ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக உறுதி செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தீர்ப்பை வெளியிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது மாநிலம் சார்பாக எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவை கேள்வி கேட்க முடியாது” என்றார்.
மேலும், "சட்டப்பிரிவு 370 என்பது போர் ஏற்பட்டால் பயன்படும் இடைக்கால விதி. அதன் வாசகத்தைப் பார்த்தால் அது ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்பது தெளிவாகிறது" என்றார்.
நீதிபதி சந்திரசூட் மேலும் கூறுகையில், "அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவு செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது" என்கிறார்.
370வது சட்டப்பிரிவை நீக்குவதற்கு எதிராக இருக்கும் மனுதாரர்கள், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, மாநிலத்தின் சார்பில் இதுபோன்ற முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்க முடியாது என்றும் வாதாடினர்.
ஜம்மு-காஷ்மீர்: சட்டப்பிரிவு 370 என்பது என்ன? எப்படி அமலுக்கு வந்தது?
இந்தியாவுடன் இணைந்த பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு தனி இறையாண்மை உரிமை இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
2019ஆம் ஆண்டில், மத்திய பாஜக அரசு 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இந்திய அரசியலமைப்பின் படி இந்த முடிவின் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்சில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தவிர, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர், இந்திய அரசியல்பட மூலாதாரம்,ANI
சட்டப்பிரிவு 370ஐ நீக்க குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு என தலைமை நீதிபதி கூறினார். ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது என்றும் இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
மேலும், 370(3) பிரிவின் கீழ், 370வது பிரிவை செயலிழக்கச் செய்ய குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது.
மாநிலத்தில் போர் போன்ற சூழல் நிலவுவதால் சட்டப்பிரிவு 370 தற்காலிக ஏற்பாடு என்றும், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அரசியலமைப்பின் 1 மற்றும் 370வது பிரிவுகளில் இருந்து தெளிவாகிறது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
தலைமை நீதிபதி சந்திரசூட், “ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 30, 2024க்குள் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் உத்தரவிடுகிறோம்” என்றார்.
இந்த அரசியல் சாசன பெஞ்ச் 16 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதிக்கு தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் மொத்தம் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்களில் சிவில் சமூக அமைப்புகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களும் அடங்குவர்.
370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
இது மக்களின் விருப்பத்திற்கு எதிரான அரசியல் செயல் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
அரசியலமைப்பு பெஞ்சில் இருந்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஜம்மு காஷ்மீரில் இதுவரை நடந்த வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க பரிந்துரைத்தார்.
ரூ.200 கோடிக்கும் மேல் பறிமுதல்: 36 இயந்திரங்கள் எண்ணியும் முடியவில்லை - யார் இந்த காங்கிரஸ் எம்.பி.?
10 டிசம்பர் 2023
5 மாநில தேர்தல் முடிவால் 'இந்தியா' கூட்டணி கலகலக்கிறதா? 2004 வரலாறு திரும்புமா?
10 டிசம்பர் 2023
சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர், இந்திய அரசியல்பட மூலாதாரம்,SCREENGRAB/SUPREME COURT OF INDIA
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 7 முக்கிய அம்சங்கள்
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு தனி இறையாண்மை உரிமை இல்லை.
குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனத்தை எதிர்த்துப் போராடுவது சட்டப்பூர்வமானது அல்ல
சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு தான்
அரசியலமைப்புச் சபை கலைக்கப்பட்ட பின்னரும் ஜனாதிபதியின் உத்தரவுகளுக்கு எந்த தடையும் இல்லை.
குடியரசுத் தலைவரின் அதிகாரப் பிரயோகம் தீங்கிழைக்கும் வகையில் இல்லை மற்றும் மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை
லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றுவது சட்டப்பூர்வமானது
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்.
இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு - பாகிஸ்தான் கருத்து
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து பாகிஸ்தானும் எதிர்வினையாற்றியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி தனது எக்ஸ் பக்கத்தில், "ஆகஸ்ட் 5, 2019ம் தேதி இந்தியாவின் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை சர்வதேச சட்டங்கள் அங்கீகரிக்கவில்லை. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை ஒப்புதலுக்கு சட்டப்பூர்வ மதிப்பு இல்லை. தொடர்புடைய ஐநா பாதுகாப்பு சபை தீர்மானங்களின்படி காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமை பறிக்க முடியாதது."
சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர், இந்திய அரசியல்பட மூலாதாரம்,X/JALIL ABBAS JILANI
சட்டப்பிரிவு 370 என்பது என்ன?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது சட்டப்பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. இந்த சட்டப்பிரிவால் இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறும் பிரிவு 1 தவிர, ஜம்மு காஷ்மீருக்கு வேறு எந்தச் சட்டமும் பொருந்தாது. ஜம்மு காஷ்மீருக்கு என தனி அரசியலமைப்பு உள்ளது.
அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் மாநிலத்திற்குப் பொருந்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. ஆனால், இதற்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம்.
வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு என மூன்று துறைகள் தொடர்பாக மட்டுமே இந்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீரின் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்றும் சட்டப்பிரிவு 370ல் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த திருத்தங்களையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வரம்புகளையும் சட்டப்பிரிவு 370 கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவரால் மட்டுமே இந்த விதியை திருத்த முடியும் என்றும் சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை 1951-இல் உருவாக்கப்பட்ட 75 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இந்திய அரசியலமைப்புச் சபையால் எப்படி இந்திய அரசியலமைச் சட்டம் உருவாக்கப்பட்டதோ, அதேபோல ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான அரசியலமைப்பை ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சபை உருவாக்கியது. 1956 நவம்பரில், மாநிலத்தின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சபை நிறுத்தப்பட்டது.
காஷ்மீர் குறித்த பாஜகவின் திட்டத்திற்கு நீண்ட காலமாகவே தடையாக இருந்தது சட்டப்பிரிவு 370தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை நீக்குவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கைகளில் தொடர்ச்சியாக கூறி வந்தது.
சட்டப்பிரிவு 370 உடன் கூடுதலாக 1954 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 35-A சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு அரசு வேலை, மாநிலத்தில் சொத்து வாங்குதல் மற்றும் மாநிலத்தில் வசித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் சிறப்பு உரிமைகளை இந்த சட்டப்பிரிவு வழங்கியது.
Post a Comment
Post a Comment