"எட்டு வயதாக இருந்தபோது, இனக்கலவரத்தில் எனது வீடு எரிக்கப்பட்டது!"





 ( வி.ரி. சகாதேவராஜா)


எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, இனக்கலவரத்தில் எனது வீடு எரிக்கப்பட்டது!
அதிலிருந்து எனது உரிமைப் போராட்டம் ஆரம்பமாகியது.
இவ்வாறு இலங்கையில் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் பி.லோகேஸ்வரி தெரிவித்தார்.

 திருமதி லோகேஸ்வரி பெருந்தோட்டத்துறையில் மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை முன்னெடுப்பது அவரது பணிகளில் அடங்கும். சர்வதேச மகளிர் மனித உரிமைப் பாதுகாவலர் தினத்தையொட்டி, தனது நாட்டில் மனித உரிமைப் பாதுகாவலராகப் பணியாற்றியதைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக பதிவு இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
அவர் மேலும் தெரிவிக்கையில்..

“எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, இனக்கலவரத்தில் எனது வீடு எரிக்கப்பட்டது. இதன் காரணமாக எனது பள்ளிக் கற்கை மூன்று மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் நாட்டில் பெண்கள் உரிமை ஆர்வலர்களின் பட்டறைகளில் கலந்துகொண்டபோது, அவர்களின் ஊக்குவிப்பு என்னை மேலும் இத்தகைய வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதற்கு காரணமாக அமைந்தது. கடந்த 25 ஆண்டுகளாக, பெண்கள், சிறுவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பெருந்தோட்டத்துறையில் உள்ள மக்கள் சார்பாக செயற்படுவதற்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்.


மலையக தமிழ் சமூகம் இலங்கையில் 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் நாட்டின் சனத்தொகையில் 4.7 வீதத்திற்கும் அதிகமானவர்கள் மலையக பெருந்தோடட் மக்களாக இருந்தாலும், அவர்கள் தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், குறைந்தபட்சம் 67 சதவீத சமூகத்தினர் இன்றும் காலனித்துவ பிரிட்டிஷ் தோட்டக்காரர்களால் நிறுவப்பட்ட நெரிசலான 'லயன் அறைகளில்' வாழ்கின்றனர். லயன்-அறை முறையை ஒழித்து, நில உரிமைக்கான வாய்ப்புகளுடன் வலுவான வீட்டுத்திட்டத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்.


அதேபோன்று, 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தோட்டத்துறை சுகாதார முறைமை இன்றும் தேசிய சுகாதார அமைப்பில் முழுமையாக இணைக்கப்படவில்லை. இலங்கையில் அனைவராலும் சமமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சுகாதார சேவை வழங்கப்படுதல் அவசியமாகும். கொள்கை அளவில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் அமைப்புகள் மாறும்போது இவை மாற்றத்திற்கு உள்ளாகின்றன.
சமூகம் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், கொள்கை மாற்றங்களால் கிட்டத்தட்ட 8,000 பேர் தங்கள் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி பணத்தை இழந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் 14 அல்லது 15 வயதிலேயே  வேலை செய்யத் தொடங்கி, ஓய்வு பெற்ற பின்னர், இத்தகைய நிதி பணத்தை சார்ந்தே உள்ளனர்;, அதில் சிலர் வயதில் அடிப்படையில்; இறந்துவிட்டனர். ஆனால் அவர்களின் பிள்ளைகளால் அந்தப் பணத்தைப் பெற முடியவில்லை. அவர்கள் சார்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழக்குத்தொடுக்கபட்டு, தற்போது அவர்கள் அந்த நிதிப்பணத்தை பெற தொடங்கியுள்ளனர்.


மேலும் சிறுபான்மையினரின் மொழி உரிமைகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. உதாரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் தமிழ் பேசும் அதே வேளையில், குறிப்பாக மருத்துவ அதிகாரிகள் சிங்கள மொழி பேசுபவர்களாக உள்ளனர். இது அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளைத் துல்லியமாகத் தெரிவிப்பிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. மருந்து பொதிகளில் கூட தமிழில் தகவல்கள் இல்லை மற்றும் பொதுப் போக்குவரத்திலும் தமிழ் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.
உதாரணமாக கொழும்பில் முறைசாரா துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணின் அவலநிலையை எண்ணிப் பாருங்கள். பேருந்துப் பலகை தமிழில் இல்லாவிட்டால், வீட்டிற்குச் செல்வதற்கான தனது பேருந்தை அவள் எப்படி அடையாளம் கண்டுகொள்வாள்? எல்லா இடங்களிலும் மூன்று மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படை உரிமைகளை அரசு மற்றும் தனியார் துறை அங்கீகரிக்க வேண்டும்.


தற்போதைய நெருக்கடிகளுடன், பள்ளிகள் மூடப்பட்டதால், இளவயது திருமணம் மற்றும் இளவயது கர்ப்பங்களும் அதிகரித்துவிட்டன மற்றும் பொருளாதார நெருக்கடியால் பெற்றோர்கள் தங்கள் 16 அல்லது 17 வயது மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கத் தூண்டினர். குழந்தைத் தொழிலாளர்களும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கினர்.
கஷ்டங்களைச் சமாளிப்பதற்கும், பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பெற்றோரை அரசு கண்காணித்து ஆதரிக்க வேண்டும். அரசு அல்லது தனியார் கம்பனி; வேலைகள் மூலம் தலைமுறை முன்னேற்றத்திற்கு சமமான கல்வி அணுகல் முக்கியம். தோட்டத் துறையில், சாதி அமைப்பும் ஒரு சவாலாக உள்ளது. இதன் காரணமாக, தமது உரிமை மீறல்களுக்கு குரல் கொடுக்காதவர்களாகவும்; உள்ளனர்.


பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான ஒப்பந்தம் (CEDAW) மற்றும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் உட்பட பல சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை கைசாத்திட்டுள்ளது. பெருந்தோட்டத்துறையில் உள்ள மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு இவை உள்ளுர் மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 


மனித அபிவிருத்தி தாபனம் 1990 இல் தோட்ட மக்களின் அபிவிருத்தியை முன்னிட்டு; இளம் வயதினரால் நிறுவப்பட்டது. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம் மற்றும் பரிந்துரைக்கிறோம்.
2003 ஆம் ஆண்டில், பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த 300,000 நாடற்ற மக்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கியது. இது சிவில் சமூகத்தின் ஆதரவுடன், குடியுரிமை உரிமைகள் மீதான பல தசாப்தங்களாக வாதிடுதல் மற்றும் பரப்புரையின் உச்சகட்டமாகும். இது எங்கள் பணியில் மிகப்பெரிய மைல்கல்.
அடிமட்ட அளவிலான அணிதிரட்டலிலும் நாங்கள் ஈடுபடுகிறோம், குறிப்பாக பெண்கள, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் தேவைகள் மற்றும் சவால்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து திட்டங்களையும் நான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுகிறேன்.


கொவிட் காலக்கட்டத்தின் போது, பாரிய உணவு பற்றாக்குறை ஏற்பட்டமையால், 350 முதல் 500 சிறு தொழில் முனைவோர் தங்கள் உணவை தாங்களே உற்பத்தி செய்துக்கொள்வதற்காக ஊக்குவித்தோம். இது ஒரு விலைமதிப்பற்ற செயற்திட்டமாக அமைந்தது. ஏனென்றால் பெண்கள் வருமானம் ஈட்ட தயாராக இருக்கும்போது, அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை, மேலும் அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க கூடியவர்களாக மேம்படுத்தப்பட்டனர்.


பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் முகமாக இலங்கையில் பெண்கள் உரிமைகள் ஆணைகுழு மற்றும் சிறுபான்மை உரிமைகள் ஆணைகுழு ஒன்று நிறுவப்பட வேண்டும். இதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக புகார் செய்து, நீதியை பெற்றுக்கொள்ள முடியும். இதைச் செய்ய நான் பரப்புரை செய்து வருகிறேன். எனது வாழ்நாளில், எனது மக்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும், எனவே அவர்களின் உரிமைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.”