சென்னை வெள்ளத்தின் கோர முகத்தை உலகுக்கு காட்டிய காணொளியின் முழு பின்னணி





 திங்கட்கிழமை அதிகாலை முதல் சென்னை வெள்ளம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கிய போது, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொளியும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பள்ளிக்கரணையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து அந்தக் காணொளி எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.


சென்னையில் 2023 பெருவெள்ளத்தின் கோர முகமாக இணையத்தில் இந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது. அந்தக் காணொளியின் உண்மைத்தன்மை மற்றும் பின்னணி குறித்து பிபிசி தமிழ் ஆய்வு செய்தது.


அந்தக் காணொளி எடுக்கப்பட்ட இடம், பள்ளிக்கரணையில் அமைந்துள்ள புரவங்கரா என்னும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான பூர்வா விண்டர்மியர் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியாகும்.


இந்தப் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இதில் இ- பிளாக் பகுதியில் இருந்த ஒரு தடுப்புச் சுவர் உடைந்ததால் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த வெள்ள நீர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை அடித்துச் சென்றது.



புரவங்கரா குடியிருப்புகளில் தேங்கியுள்ள வெள்ள நீர்

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றியிருந்த பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் மேடவாக்கம் ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் அந்த குடியிருப்புப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. இது குறித்து அந்தக் குடியிருப்பின் இ- பிளாக் பகுதியில் வசித்து வரும் ரூபேஷ் என்பவரிடம் பேசினோம்.


"ஞாயிறு இரவு முதல் இங்கு நிலைமை மோசமாகத் தொடங்கியது. முதலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்ததால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். திங்கள் கிழமை அதிகாலையில் பெரும் சத்தம் ஒன்று கேட்டது.


முதல் தளத்தில் இருக்கும் என் வீட்டின் பால்கனிக்கு சென்று பார்த்தேன். அங்கு என் கண்கள் கண்ட காட்சியை நம்ப என் மனம் மறுத்தது," என்று அந்தச் சம்பவத்தை விவரித்தார் ரூபேஷ்.


சென்னை மழை: சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என்ன சொல்கிறார்கள்?


வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குடியிருப்பு வளாகத்திற்குள் நிற்கின்றன.


ரூபேஷ் அன்று நடந்ததை விவரித்தார் பிபிசி தமிழிடம் விவரித்தார்.


"குடியிருப்புப் பகுதியின் தடுப்புச் சுவர் உடைந்து தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியிருந்தது. உடனே நான் கீழ் தளத்திற்குச் சென்று அங்கு நிறுத்தியிருந்த என் இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்த முயன்றேன்.


ஆனால் தண்ணீர் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. சில நொடிகளில் முழு சுவரும் உடைந்துவிட்டது. ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, எனது வீட்டிற்குத் திரும்பி விட்டேன். முதல் தளம் வரை தண்ணீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இருந்தோம். இந்த குடியிருப்புப் பகுதிக்குப் பின்புறம் ஒரு பெரிய மைதானம் உள்ளது.


வெள்ள நீரால் மைதானம் நிறைந்து, தண்ணீர் எங்கும் செல்ல வழியில்லாமல் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டது. இப்போது வரை இங்கு மின்சாரம் சரி செய்யப்படவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதி ஆங்காங்கே கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த அல்லது மீட்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை," என்று கூறினார்.


'கட்டுமான நிறுவனத்தின் அலட்சியமே காரணம்'

சென்னை வெள்ளத்தின் கோர முகத்தை உலகுக்கு காட்டிய காணொளியின் முழு பின்னணி

"அந்தக் காணொளியில் முதலில் அடித்துச் செல்லப்படும் வாகனம் என்னுடையதுதான். அதைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்," எனக் கூறுகிறார் இ-பிளாக் பகுதியில் வசித்து வரும் ரவி.


"அந்தக் காணொளியை நீங்கள் பார்த்தால், அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதன் தடுப்புச் சுவர் மிக உயரமானதாகவும் பலமானதாகவும் இருக்கிறது.


ஆனால் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் தடுப்புச் சுவர் மிகவும் பலவீனமாக இருந்தது. இது குறித்துப் பலமுறை எனது மகன் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று கூறினார் ரவி.


அதுமட்டுமின்றி, சுவர் உடைந்துவிடும் என்ற அச்சம் அங்குள்ள பலருக்கும் ஏற்கெனவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இதுகுறித்து குடியிருப்புவாசிகள் தைரியமாகப் பேச முன்வரவில்லை எனவும் ரவி குறிப்பிட்டார்.


"அந்தச் சுவரை பலமாகக் கட்டியிருந்தால் இத்தனை வாகனங்கள் சேதமடைந்திருக்காது. இப்போதும்கூட கட்டுமான நிறுவனத்தின் சார்பிலிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக மட்டுமே உணவு, குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது."


சென்னை வெள்ளம்: பாதுகாப்பாக இருக்க இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்!


வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்ட வைரல் காணொளிபட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,

வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.


லேக் வியூ அபார்ட்மென்ட் எனக் கூறி விற்றார்கள், ஆனால் இப்போது குடியிருப்பு முழுவதுமே ஏரியின் மீது கட்டப்பட்டதைப் போலத்தான் உள்ளது என்றும் ரவி குறிப்பிட்டார்.


"இந்தச் சேதங்களுக்கு யார் பொறுப்பு? இவ்வளவு வீடுகளைக் கட்டுபவர்கள் ஒரு பலமான சுவரைக் கட்ட முடியாதா?" எனக் கேள்வியெழுப்பும் ரவியின் குரல் கோபமும் ஆதங்கமும் கலந்தே ஒலித்தது.


ஏற்கெனவே கட்டப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட பிளாட்டுகளில் இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது, மேலும் புதிதாக மூவாயிரம் பிளாட்டுகள் அருகில் கட்டப்பட்டு வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.


"பள்ளிக்கரணை குடியிருப்புகளில் நிலைமை கொஞ்சம்கூட சரியாகவில்லை. கட்டுமான நிறுவனத்திடம் கேட்டால் எந்தப் பதிலும் இல்லை. வீட்டை விளம்பரம் செய்து விற்றுவிட்டு காணாமல் போய் விட்டார்கள். லட்சங்களைக் கொடுத்து வீடுகளை வாங்கியவர்களின் நிலை தற்போது இப்படி உள்ளது," எனக் கூறினார்.




"குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் தண்ணீர் இல்லை. முதியோர்களும் குழந்தைகளும் மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்," என்று பெயர் வெளியிட விரும்பாத குடியிருப்புவாசி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.


தேங்கியுள்ள நீரை வெளியேற்றவோ அல்லது ஆங்காங்கே பழுதாகி நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவோ போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.


மேலும், தேங்கியுள்ள வெள்ள நீரால் நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அரசிடமிருந்தோ, கட்டுமான நிறுவனத்திடம் இருந்தோ எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.


"கட்டுமான நிறுவனம் நினைத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடக்காமல் நிச்சயமாகத் தடுத்திருக்க முடியும்," என்று உறுதிபடக் கூறுகிறார் பூர்வா விண்டர்மியல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர்.


மலேசியாவில் சீனா கட்டிய சொர்க்க நகரம், பேய் நகரமானது எப்படி?


பூர்வா விண்டர்மியர் குடியிருப்போர் சங்கத்தின் துணைத் தலைவர் பாலமுரளியிடம் பேசியபோது, "கட்டுமான நிறுவனத்தின் மீதுதான் முழு தவறும் எனச் சொல்ல முடியாது. அந்தத் தடுப்புச் சுவருக்குப் பின்னால் பல ஏக்கர்களுக்கு காலி நிலம் உள்ளது.


அதிக மழை காரணமாக வெளியேறிய நீர், தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு வந்துவிட்டது. எவ்வளவு பலமான சுவராக இருந்தாலும்கூட அதைத் தடுத்திருக்க முடியாது.


இப்போதைக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்று வருகிறோம். குடியிருப்புப் பகுதியின் சில சுற்றுச் சுவர்களை ஜே.சி.பி மூலம் உடைத்து நீரை வெளியேற்றி வருகிறோம்.


முடிந்தவரை உணவு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். மின்சாரம் இல்லாததால் குடிநீரை மேல் தளங்களுக்குக் கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. கட்டுமான நிறுவனத்திடம் கலந்து பேச முயற்சி எடுத்துள்ளோம். இயல்பு நிலை திரும்ப சில நாட்களாகும்," எனக் கூறினார்.


இந்தப் பிரச்னை தொடர்பாக புரவங்கரா கட்டுமான நிறுவனத்தின் திட்டப் பொறியாளரிடம் பேச முயன்றபோது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.