இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் 2023.11.30ஆம் திகதி இடம்பெற்ற பீடத்தினுடைய பேராசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பேராசிரியர், கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தினால் அப்பீடத்தினுடைய பேராசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றேன். குறிப்பாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக மிகவும் பிரயத்தனப்பட்ட பீடத்தினுடைய பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் அவர்களுக்கு எனது விசேடமான நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியராகப் பதவி உயர்வு பெறுவதற்கான எனது பயணம் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கொண்டது. அப்பயணம் மலர்கள் தூவிய அழகிய பயணமாக அமையவில்லை. மாறாக அது கரடுமுரடானதாகவும் பல்வேறு இன்னல்களைத் தரக்கூடியதாகவுமே இருந்தது. 1995இல் நான் தற்காலிக விரிவுரையாளராக இணைந்து கொண்ட போது மிக எளிமையான, அடிப்படை வசதிகள் கூட இப்பல்கலைக்கழகத்தில் இருக்கவில்லை. இஸ்லாமிய கற்கைகள் பாடத்தைப் பொறுத்தளவில் அப்போது இருவர் மாத்திரமே விரிவுரையாளர்களாக இருந்தனர். அதில் மறைந்த துணைப் பேராசிரியர் கே.எம்.எச். காலிதீன் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் கலை, கலாசாரப் பீடத்தின் பீடாதிபதியாகவும் சிறிது காலத்தின் பின்னர் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் பதில் பீடாதிபதியாகவும் ஒரே நேரத்தில் செயற்பட்டதால் பாடத்தோடு தொடர்பான அனைத்து வேலைகளும் என் மீதே சுமத்தப்பட்டிருந்தது. ஆரம்ப காலத்தில் பேராசிரியர்களோ கலாநிதிகளோ பல்கலைக்கழகத்தில் இல்லாதிருந்ததால் ஆய்வு பற்றிய விழிப்புணர்வோ அது பற்றிய வழிகாட்டல்களோ எனக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் 2009 வரை இனப் பிரச்சினையால் ஏற்பட்டிருந்த கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருந்தது. நான் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பதனால் ஒவ்வொரு முறையும் எனது சொந்த ஊருக்குப் போகும் போதெல்லாம் 8 சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவற்றில் சிலவற்றில் எனது பிரயாணப் பொதிகளைச் சுமந்து கொண்டு சுமார் 200 மீற்றர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டியிருந்தது. இவ்வாறான பல்வேறு துன்பங்களையும் அசௌகரியங்களையும் பொறுமையாக ஏற்றுச் செயற்பட்டதற்குப் பரிசாக இப்பதவி கிடைத்துள்ளதாக நான் நம்புகின்றேன்.
ஒரு பல்கலைக்கழகத்தை, அதன் பீடங்களை அளவீடு செய்வதற்கு அங்குள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கையும் ஒன்றாகும். அதிகமான பேராசிரியர்களைக் கொண்ட, அவர்களின் ஆய்வு வெளியீடுகளைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகம், பீடம் வளர்ச்சியுற்றதாகக் கருதப்படுகின்றது. அந்த வகையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடமும் எதிர்காலத்தில் மேலும் பல பேராசிரியர்களைக் காண வேண்டும். அதற்காக நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
எனது பேராசிரியர் பதவி உயர்வுக்கு பின்னணியில் இருந்தவர்களுக்கு இந்நிகழ்வில் நன்றி கூறுவது எனது கடமை என நான் நினைக்கின்றேன். முதலில் எனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு வழிகாட்டி, நான் திசை திரும்பிப் போகும் போதெல்லாம் சரியான திசைக்கு என்னை அழைத்துச் சென்ற அல்லாஹ்வுக்கு எனது நன்றிகள் உரியன. அவனே அனைத்துப் புகழ்களுக்கும் உரித்தாளன். அல்ஹம்து லில்லாஹ்.
அடுத்து மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது பெற்றோர்களை (ரஹிமஹூமல்லாஹ்) நன்றியோடு நினைவு கூர்கின்றேன். அவர்கள்தான் எனது சிறிய பருவத்திலிருந்து என்னை சீராக வளர்த்து, கல்வி அடைவுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.
எனது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் துணையாக இருந்து, என்னோடு சேர்ந்து பயணிக்கின்ற எனது துணைவி நன்றிக்குரியவர். அவரின் உதவியும் ஒத்தாசையும் இல்லாதிருந்தால் என்னால் இந்த உச்சத்தைத் தொட முடியாதிருந்திருக்கும். அத்தோடு எனது பிள்ளைகளும் நன்றியோடு பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்த இடத்தில் ஒரு நபரைக் குறிப்பிடாவிட்டால் இந்த உரை முளுமை பெறாது. அவர்தான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள். அவர் 2015ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகப் பதவி ஏற்ற போது ஒரு பேராசிரியர் கூட இங்கு இருக்கவில்லை. அவர் இங்குள்ள முதுநிலை விரிவுரையாளர்களை பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு தூண்டியது மட்டுமன்றி அதற்கான அனைத்து விதமான ஒழுங்குகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர் 2021இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை விட்டுச் செல்லும் போது 17 பேராசிரியர்கள் இங்கு பதவி உயர்வு பெற்றிருந்தனர். தற்போது 30இற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த அடைவுகளுக்கு மூலகாரணமாக பேராசிரியர் நாஜிம் அவர்கள் இருந்துள்ளார்கள்.
இறுதியாக எனது பீடத்தைச் சேர்ந்த சக விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எனது பேராசிரியர் பதவிக்கு பங்காற்றியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகும் என்றார்.
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வின்போது பேராசிரியர்களான எஸ்.எம்.எம். மஸாஹிர், ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment