மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலும் வேலைத்திட்டம்




 


நூருல் ஹுதா உமர்


கடந்த 2023.12.07 ஆம் திகதி நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அஹதியா பாடசாலைகள், குர்ஆன் மத்ரசாக்கள் , அரபுக் கல்லூரிகள் மற்றும் மேலதிக கல்வி நிறுவனங்களில் சிறுவர்களின உச்சநலன் பேணப்படுவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின்  தலைமையில் 2023.12.28 ஆம் திகதி  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர், உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர், உலமா சபை செயலாளர், மதரஸாக்கள் மற்றும் அரபுக்  கல்லூரிகளின் அதிபர்கள், நிர்வாகிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், அகில இலங்கை அகதியா பாடசாலைகள் சம்மேளனத்தின் உதவி தலைவர், கலாசார உத்தியோகத்தர் ஆகியோர்கள், சிறுவர் பெண்கள் பிரிவை சேர்ந்த உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் முழு நேர, பகுதி நேர மதரசாக்கள் அரபுக் கல்லூரிகள் என்பன 15 .01. 2024 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் எவ்விதமான மேலதிக வகுப்புக்களும்  நடைபெற தடைவிதிக்கப்படுகின்றது என்றும் வெள்ளிக்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதாயின் அஸர் தொழுகைக்கு பிற்பாடே நேரசுசிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பெற்றோருடைய அவதானிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் இயங்குகின்ற மேலதிக வகுப்புகள் தவிர ஏனைய மேலதிக வகுப்புகளை மாலை 06.00 மணிக்கு முன்னர் முடிவுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.