திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் இருந்து இடைநின்ற சுமார் 600 மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீண்டும் கல்வி தொடர வழிவகை செய்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். யூடியூபராகும் ஆசை, இளைஞர்களின் சீண்டல்கள் போன்ற பல காரணங்களால் மாணவ, மாணவியர் பலரும் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்களை ஒவ்வொருவராக கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மீண்டும் பள்ளியில் சேர்த்தது எப்படி?
திருப்பத்தூர் மாவட்டத்தில் 993 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அவர்களுள் 1,898 மாணவ, மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடைநின்றது கண்டறியப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பொருட்டு பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். முதல்கட்டமாக, நவம்பர் மாதம் ஏழாம் தேதி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை இடை நின்ற 402 மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 12 மாணவர்கள், 19 மாணவிகள் என மொத்தம் 31 மாணவ, மாணவிகளின் வீட்டிற்கே சென்று கல்வியை தொடராமல் இடைநின்றவர்களுக்கு அறிவுரைகளை கூறி, தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குக் கொண்டு வந்துவிட்டு பாட புத்தகங்களை வழங்கியுள்ளார் ஆட்சியர்.
மாணவ, மாணவிகள் பலரும் பள்ளிகளில் இருந்து இடைநின்ற பல மாணவர்கள் பிபிசி தமிழிடம் பேசினர்.
'யூடியூபர்' ஆவதற்காக படிப்பை விட்ட மாணவர்
பள்ளி இடைநிற்றல்
தாசியப்பனூர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், தனக்கு யூடியூபராக வர வேண்டும் ஆசை இருப்பதாகவும் `ரீல்ஸ்` எடுப்பதற்கு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது என்பதற்காக படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா பொது முடக்கம், அதைத்தொடர்ந்து செல்போன், சமூக ஊடகங்கள் உள்ளிட்டவை பள்ளி மாணவர்களின் வாழ்வில் செலுத்திய தாக்கங்களை உணர்த்துவதாக இருந்தது அம்மாணவரின் பேச்சு.
மேலும், அதே பகுதியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது அங்குள்ள இளைஞர்கள் ஒரு சிலர் மாணவிகளை பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாகவும் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகவும் தங்களை தகாத முறைகளில் துன்புறுத்துவதாகவும் இதனால் தன்னால் படிப்பை தொடர முடியாமல் தான் நின்று விட்டதாக தெரிவித்தார்.
மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவி பிபிசியிடம் கூறுகையில், "எனக்கு தலைவலி பிரச்னை இருக்கிறது. இதனால் என்னால் படிப்பில் சரிவர கவனத்தை செலுத்த முடியவில்லை" என கூறினார்.
தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கூறிய மாணவ, மாணவிகள் பள்ளிகளில் மீண்டும் சேர்ந்துள்ளனர். தலைவலி பிரச்னை கொண்ட மாணவியை சிஎம்சி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ள மாவட்ட ஆட்சியர், மாணவியின் மருத்துவ செலவுகளை அரசே பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்.
தெலங்கானா தேர்தலில் தோற்றாலும் கொண்டாடப்படும் ‘பரேலக்கா’ - யார் இவர்?
10 டிசம்பர் 2023
உலகிலேயே சிங்கப்பூர் மாணவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குவது எப்படி? சிங்கப்பூர் கணிதத்தில் என்ன சிறப்பு?
9 டிசம்பர் 2023
பள்ளி இடைநிற்றல்
வறுமையால் படிப்பை கைவிட்ட மாணவர்கள்
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் பசிலிகுட்டை பகுதியை சேர்ந்த மாணவர் கூறுகையில், "நான் சரியாக பள்ளிக்கு வராமல் போனதற்கு என்னுடைய வறுமை மற்றும் குடும்ப சூழல் தான் காரணம்" என்றார்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருசில மாணவர்கள், `படித்தால் முன்னேற முடியாது, `எங்களுடன் ஜாலியாக இரு` என அவரிடம் கூறி `தவறாக வழிநடத்தியதும் மாணவரிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது.
"அவர்கள் சொல்வதையும் மீறி நான் பள்ளிக்கு சென்று வந்தேன். ஆனால், எனக்கு சலிப்பு வந்துவிட்டது. இதனால் பள்ளியிலிருந்து நின்றுவிட்டேன் " என்கிறார் அவர்.
அதன்பின், பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். வருகை பதிவுகளை வைத்து இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பேசுங்கள் என அதில் ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இதன்பின், அந்த மாணவரின் வீட்டுக்கு இரு ஆசிரியர்கள் சென்று பேசியுள்ளனர்.
"என்னுடைய சூழலை அவர்களிடம் தெரிவித்த போது, `பள்ளிக்கு வா, உனக்கு எல்லா உதவிகளையும் நாங்கள் செய்கிறோம்` என்று அறிவுரைகளை வழங்கினர்" என தெரிவிக்கிறார் அம்மாணவர்.
எதிர்காலத்தில் தான் ஒரு நல்ல ராணுவ வீரராக விரும்புவதாகவும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் இதற்கான வாய்ப்பு அளிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாக அம்மாணவர் கூறினார்.
வி.பி.சிங் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?
27 நவம்பர் 2023
கேரளா கூட்ட நெரிசலில் 4 பேர் மூச்சுத்திணறி பலி - பல்கலைக் கழக விழாவில் என்ன நடந்தது?
26 நவம்பர் 2023
பள்ளி இடைநிற்றல்
எதிர்காலத்தில் சாதிக்க விரும்பும் மாணவர்கள்
திருப்பத்தூர் உஸ்மானியா பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், "என் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பதால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நான் பள்ளியிலிருந்து நின்று விட்டேன். என் அண்ணன் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். ஆனால், அவருக்கு காச நோய் ஏற்பட்டு மூன்று மாத காலமாக வீட்டில் இருக்கிறார். இதனால், வீட்டு சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் என்னை வேலைக்கு அனுப்பினர்.
எனக்கு படிப்பதற்கு ஆசை இருந்தது. என்றாலும், என் குடும்ப சூழ்நிலையின் காரணமாக நான் படிப்பைவிட்டு வேலைக்கு சென்றேன். இப்போது கல்வித்துறையின் முன்னெடுப்பால் மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளேன். 12-ஆம் வகுப்பில் 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க ஆசை உள்ளது நான் எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆசிரியராக விரும்புகிறேன்" என தெரிவித்தார்.
திரியாலம் ஜோலார்பேட்டை பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், "பத்தாம் வகுப்பில் 328 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். குடும்ப சூழ்நிலை காரணமாக ஆறு மாத காலமாக வேலைக்கு சென்று இருந்தேன். மறுபடியும் நான் நவம்பர் மாதம் பள்ளி சேர வேண்டும் என்று வந்தேன், ஆனால் மீண்டும் சேர்க்க முடியாது என்று பள்ளியில் கூறி விட்டார்கள். எனக்கு ஓவியம் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் விருப்பம் உள்ளது. நான் 12 ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று போலீசாக விரும்புகிறேன் " என்று தெரிவித்தார்.
மற்றொரு மாணவர் கூறுகையில், "என்னுடைய அப்பா தேநீர் விற்பனை செய்கிறார். அம்மா பெட்டிக்கடை வைத்துள்ளார். எங்களுடையது கூட்டுக் குடும்பம். ஒரே வீட்டில் ஒன்பது பேர் வசித்து வருகிறோம். இதனால் நான் பள்ளிக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இல்லை. வறுமையின் காரணமாக பள்ளியில் இருந்து என்னை நிறுத்தி விட்டார்கள். மாவட்ட ஆட்சியரால் நான் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்துள்ளேன். எனக்கு படிக்க மிகவும் ஆர்வம் இருக்கின்றது. நான் படித்து டீச்சராக ஆசைப்படுகிறேன்" என்றார்.
நீட்: பள்ளியில் உயிரியல் படிக்காமலே மருத்துவ படிப்பில் சேரலாமா? புதிய விதிகளால் என்ன குழப்பம்?
25 நவம்பர் 2023
காஞ்சிபுரம்: பள்ளி குடிநீர் தொட்டியில் கிடந்தது மலமா? முட்டையா? ஆட்சியர் வந்ததும் காட்சிகள் மாறியது எப்படி?
25 நவம்பர் 2023
பள்ளி இடைநிற்றல்
"விழிப்புணர்வு இல்லை"
திரும்பத்தூர் மாவட்டத்தை சுற்றிலும் புங்கம்பட்டு நாடு, புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. அந்த மலைப்பகுதிகளில் பல்வேறு குக்கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
"அம்மக்களுள் பெரும்பாலானோர் அன்றாட வாழ்வுக்காக பிழைப்பை தேடி அண்டை மாவட்டங்கள், மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர் இதனால் பிள்ளைகளை சரிவர பார்த்துக்கொள்ள முடியாமல் வீட்டில் இருக்கும் முதியவர்களிடம் ஒப்படைத்து செல்கின்றனர். இதனால் முதியவர்களை சிறுவர்கள் ஏமாற்றிவிட்டு பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுகின்றனர்.
மக்களுக்கு போதுமான விழிப்புணர்வும் படிப்பதற்கான சூழ்நிலைகளும் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டு இருப்பதாலும் மாணவர்கள் ஏராளமானோர் பள்ளியை விட்டு நின்று விடுகின்றனர். அவர்களைக் கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் பள்ளியில் மீண்டும் சேர்க்கும் பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக" பிபிசியிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: ஏழாம் வகுப்பு முஸ்லிம் மாணவியிடம் ஆசிரியை வெறுப்புப் பேச்சா? உண்மை என்ன?
22 நவம்பர் 2023
திருப்பதியில் வைஷ்ணவ பிராமணர்கள்தான் லட்டு தயாரிக்க முடியும்: தேவஸ்தான அறிவிப்பால் சர்ச்சை
22 நவம்பர் 2023
பள்ளி இடைநிற்றல்
"நடவடிக்கை தொடரும்"
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கூறுகையில், "பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வர செய்யும்போது குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்படுகின்றன. இளம் வயது தாய்மார்களின் மரணங்கள் தடுக்கப்படுகின்றன.
இனிவரும் காலகட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் குறைந்தபட்சம் சுமார் ஆயிரம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவர பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை சுமார் 600 மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
மாணவ, மாணவிகளின் சமூக - பொருளாதார காரணங்களையும், உடல் ரீதியான பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் பரிந்துரைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இடைநின்ற பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டாலும் அவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டு தொடர்ந்து பள்ளிக்கு வருகிறார்களா என்று கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
மாணவ, மாணவிகளின் தனியுரிமையை காக்கும் பொருட்டு அவர்களின் பெயர்கள் இக்கட்டுரையில் தவிர்க்கப்பட்டுள்ளன.
Post a Comment
Post a Comment