விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்




 Rep/BBC.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத் திடலில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவரது உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.