திருவாசக மாநாடு 2023





நூருல் ஹுதா உமர் 

அம்பாரை மாவட்டம் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் எற்பாட்டில் எதிர்வரும் 2023.12.15 வெள்ளி முதல் 2023.12.17 ஞாயிறு வரை தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் கலாபூசணம் தம்பிமுத்து மகேந்திரா அவர்களின் தலைமையில் திருவாசக மாநாடு இடம் பெறவுள்ளது. இது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (02) மாலை இடம்பெற்றது. 

இங்கு கருத்து வெளியிட்ட ஏற்பாட்டு குழுவினர், சமய சமூக ஆன்மிக இறை ஆசி கிடைக்க வேண்டும் எனும் நோக்குடன் இந்தியாவில் இருந்து சூரியநார் கோவில் ஆதின தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமிகளின் வருகையை ஒட்டி இந்து ஸ்வயம் சேவக சங்கமும் ஆலயங்களும் மற்றும் இந்து சமய அமைப்புக்களும் இணைந்து நடாத்தும் திருவாசக மாநாட்டிற்கு அனைவரும் கலந்து இறை அருள் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தனர். 

மேலும் 1ம் நாள் நிகழ்வாக எதிர்வரும் 2023.12.15 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணிவரை "மணிவாசகப் பெருமானும் திருவாசகமும்' எனும் தலைப்பில் செயல் அமர்வு நடைபெறவுள்ளதுடன் 2ம் நாள் நிகழ்வாக 2023.12.16 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணிமுதல் பிற்பகல் 12.00 மணிவரை "திருவாசகம் ஓதுதலும் பொருள் கூறலும்" எனும் தலைப்பிலான செயலமர்வு நடைபெற உள்ளதுடன் 3ம் நாள் நிகழ்வுகள் 2023.12.17 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 8.30 ஆரம்பித்து பிற்பகல் 2.00 மணிவரை நிறைவுபெறவுள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் இந்நிகழ்வில் தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமியின் அருளுரை, மாநாட்டின் திருவாசக நூல் வெளியீடு, மாநாட்டின் நிறைவை தொடர்ந்து உருத்திராட்சம் அணிவித்து தீட்சை வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.