விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள், பாலத்தீன கைதிகளின் நிலை என்ன?





 இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவுக்கு அருகே பெய்துனியா சோதனைச் சாவடியில் விடுவிக்கப்பட்டனர்.


இதைத் தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழு 13 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளது. அவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலை அடைந்துள்ளனர்.


நான்கு நாட்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் பேரில், 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும் 150 பாலத்தீன சிறைவாசிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை கத்தார் மத்தியஸ்தம் செய்தது.


சிறையில் இருந்த பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் வெள்ளிக்கிழமை வடக்கு இஸ்ரேலில் உள்ள இரண்டு சிறைகளில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருக்கும் ராணுவ நீதிமன்ற கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர்.


வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலிய பணயக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கும்போது, அடுத்த நாள் விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் கொடுக்கும் என நம்பப்பட்டது.



24 பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்: கொண்டாடிய இஸ்ரேல்


கைதிகள் பரிமாற்றத்திற்காக தோஹாவில் ஒரு செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் பாதுகாப்பான சூழலில் இந்தப் பரிமாற்றம் நடைபெறுவதை உறுதி செய்வதாகவும் கத்தார் தெரிவித்துள்ளது.


எப்படி இருப்பினும், போர் நிறுத்தம் மற்றும் முதல் தொகுதி பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், விஷயங்கள் தவறான திசையில் திரும்பக்கூடும் என்ற அச்சம் இன்னும் உள்ளது. எனவே, அனைவரின் கண்களும் இரு தரப்பில் இருந்து விடுவிப்பு மற்றும் அடுத்த செயல்முறையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


காஸா பகுதியில் 13 இஸ்ரேலிய குடிமக்கள் உட்பட ஹமாஸ் பிடியில் இருந்த 24 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேலிய குடிமக்கள் 13 பேர், தாய்லாந்து குடிமக்கள் 10 பேர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகன் விடுவிக்கப்பட்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை கத்தார் மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளது.


பாலத்தீனம்: மேற்கு உலகை மிரட்ட அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன ஆகும்?


24 பணயக் கைதிகள் ரஃபா வழியாக எகிப்துக்குள் வந்தனர்.


ஹமாஸ், இஸ்ரேல் இடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 13 இஸ்ரேலிய பணயக் கைதிகள் மற்றும் 39 பாலத்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தருணம் மிகவும் பதற்றமான தருணமாக இருந்தது.


ஹமாஸ் சார்பில் விடுவிக்கப்பட்ட 24 பணயக் கைதிகள் செஞ்சிலுவை சங்கக் கொடிகளை ஏந்திய வாகனங்களில் காஸாவில் இருந்து புறப்பட்டு, அதன் எல்லையில் அமைந்துள்ள ரஃபா வழியாக எகிப்துக்குள் வந்தனர். அவர்கள் பாதுகாப்பாக வந்தடைந்தபோது அங்கிருந்த மக்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை வீசியதைக் காண முடிந்தது.


இந்தப் பணயக் கைதிகள் டெல் அவிவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


இதற்கிடையில் மேற்குக் கரையில் ரமல்லாவுக்கு அருகிலுள்ள பெத்துனியா சோதனைச் சாவடியில் ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் திரண்டனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியது.


மேற்குக் கரையில் இருந்த பிபிசி செய்தியாளர் லூசி வில்லியம்சன் கூற்றுப்படி, சோதனைச் சாவடியில் செஞ்சிலுவை சங்க வாகனத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.


பாலத்தீன கைதிகளை இஸ்ரேலில் இருந்து விடுவிப்பதில் தாமதம் ஏன் என்று பாலத்தீனியர்கள் கேள்வியெழுப்பினர்.


செஞ்சிலுவை சங்க வாகனம் அருகே திரண்டிருந்த மக்கள், “கைதிகள் எங்கே? கைதிகள் எங்கே?” என்று கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். சோதனைச் சாவடி அருகே சாலையில் இஸ்ரேல் படைகளுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


பாலத்தீனியர்களின் குழுவை பின்னுக்குத் தள்ள, இஸ்ரேலிய ராணுவம் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியது.


பாலத்தீன கைதிகளை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், சோதனைச் சாவடியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாகவே தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


உயிரியல் படிக்காமல் மருத்துவப் படிப்பில் சேர முடியுமா? தேசிய மருத்துவ ஆணைய புது விதிகள் கூறுவது என்ன?


13 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்


விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்களில் 70 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்களும் ஒரு தாயும் அவரது ஏழு வயது மகளும் அடக்கம்.


அவர்களில் ஒருவர் 78 வயதான மார்கலிட் மோசஸ். புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர். அக்டோபர் 7ஆம் தேதி கிப்புட்ஸ் நிர் ஓஸில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டார்.


கிப்புட்ஸ் நிர் ஓஸில் இருந்து 72 வயதான அடினா மோஷே கடத்தப்பட்டார்.ஹமாஸ் தனது கணவர் சைட் மோஷேவை கொலை செய்ததாகக் கூறினார். ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு வெளியான வீடியோ காட்சிகளில் இருந்து அவரது குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.


அதில், இரண்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு இடையில் அவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்துகொண்டிருந்தார்.


அவருக்கு மாயா, ஹேல், சாசன், அமோஸ் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.


இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளில் டேனியல் அலோனி மற்றும் அவரது ஐந்து வயது மகளான எமிலியாவும் அடங்குவர்.


கிப்புட்ஸ் நிர் ஓஸில் இருந்து அவர்கள் கடத்தப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலின்போது அவர்கள் தம் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக கிப்புட்ஸ் பகுதிக்கு வந்திருந்தனர்.


“பயங்கரவாதிகள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். இனி தான் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை,” என்பதே டேனியலின் கடைசி செய்தியாக இருந்தது.


வெளிநாட்டு அழைப்புகளை இலவச உள்நாட்டு அழைப்பாக மாற்றும் நூதன மோசடி

24 நவம்பர் 2023

இஸ்லாமின் இரு பிரிவுகளால் மத்திய கிழக்கில் ஏற்படும் தாக்கம்

24 நவம்பர் 2023

பணயக் கைதிகளின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக் கைதிகள் விடுதலைபட மூலாதாரம்,YONI ASHER

படக்குறிப்பு,

கடத்தப்பட்டவர்களில் கடைசி நபரும் திரும்பும் வரை கொண்டாட மாட்டேன்


இன்று விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளில் யோனி ஆஷரின் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் அடக்கம். அவர் இதுகுறித்துப் பேசியபோது, “கடத்தப்பட்டவர்களில் கடைசி நபரும் வீடு திரும்பும் வரை இதைக் கொண்டாட மாட்டேன்,” என்று கூறினார்.


ஆஷர் தனது மனைவி டோரன் மற்றும் மகள்கள் ராஸ், அவிவ் ஆகியோர் மற்ற பணயக் கைதிகளுடன் ஒரு டிரக்கில் ஏற்றப்படும் வீடியோவை பார்த்தார். அப்போது அவர்கள் காஸா எல்லைக்கு அருகில் உறவினர்களுடன் காத்திருந்தனர்.


இதுகுறித்து இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் அவர், “எனது குடும்பத்தை மீட்டுக் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது என்னை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது, என்னைக் கண்ணீர்விட வைத்துள்ளது. ஆனால், நான் இதைக் கொண்டாட மாட்டேன். கடத்தப்பட்டவர்களில் கடைசி நபரும் திரும்பும் வரை கொண்டாட மாட்டேன்,” என்று கூறியுள்ளார்.


“எங்கள் குழந்தைகள், எங்கள் தந்தைகள், எங்கள் தாய்மார்கள், எங்கள் சகோதரிகள் இந்தத் தருணத்தில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். மக்கள் இதயம் உடைந்துள்ளனர். கடத்தப்பட்ட ஒவ்வொரு பணயக் கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்ய விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.



இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக் கைதிகள் விடுதலை

படக்குறிப்பு,

சிறை எங்களுக்கு மகிழ்ச்சியற்றதாகவும் சங்கடமாகவும் இருந்தது


இஸ்ரேல் தரப்பால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனிய கைதிகளில் ஒருவரான மாரா பகீர், சமீபத்தில் ஜெருசலேமில் உள்ள பெய்ட் ஹனினாவில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்தார்.


அவர் 2015இல் 16 வயதாக இருந்தபோது கைது செய்யப்பட்டார். எல்லை போலீஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதற்காக எட்டரை ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


மாரா பகீர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த ஒப்பந்தம் பலரின் மரணத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியற்றதாகவும் சங்கடமாகவும் இருக்கிறது,” என்று தெரிவித்தார்.


தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், “வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்ததாகவும் காஸாவின் நிலைமை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.


மேலும், இந்த ஒப்பந்தம் தனக்கு ஆச்சரியம் அளிக்கும் செய்தியாக இருந்தது என்றும் மாயா பகீர் கூறினார்.


மகாராணி என அழைக்கப்பட்ட ரோமானியப் பேரரசர் : பிரிட்டன் அருங்காட்சியகம் தரும் தகவல்கள்


"இது ஒரு செயல்முறைக்கான தொடக்கம்” என்று விவரித்துள்ளார் ஜோ பைடன்


இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கு இடையே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடந்து வரும் உக்கிரமான சண்டையில் தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.


இன்று காலை நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு முதல் தொகுதி இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


காஸாவில் ஹமாஸா சிறைபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஏழு வாரங்கள் கழித்து விடுவிக்கப்பட்ட எட்டு இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் பெட்டா திக்வாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்ததைக் காண மக்கள் கூடியிருந்தனர். அது கொண்டாட்டத்தின் ஓர் அரிய காட்சியாக இருந்தது.


மருத்துவப் பொருட்கள், எரிபொருள், உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 137 வாகனங்கள் எகிப்தில் இருந்து காஸாவுக்குள் நுழைந்தனர். மோதலின் தொடக்கத்தில் இருந்து இது மிகப்பெரிய அளவிலான விநியோகமாகக் கருதப்படுகிறது. ஆனால், இது போதுமானதாக இருக்காது என்று ஆக்ஸ்பாம் சுட்டிக்காட்டியது.


போர் நிறுத்தம் இருந்தபோதிலும், காஸாவின் தெற்கில் இருந்து வடக்கே பாலத்தீனியர்கள் செல்ல முயன்றபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.


இந்நிலையில், “மனிதாபிமான இடைநிறுத்தம் என்பது தற்காலிகமானதுதான். காஸாவின் வடக்குப் பகுதி ஒரு போர் மண்டலமாகவே உள்ளது,” என்று கூறி, வடக்கு நோக்கிச் செல்ல வேண்டாம் என்று இஸ்ரேலிய ராணுவம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இதற்கிடையில், காஸா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ‘பேரழிவு’ நிலமை தொடர்வதாக அங்குள்ள அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மருத்துவமனையில் இருந்து செயல்படுவதாகக் கூறி இஸ்ரேலிய படைகள் கடந்த வாரம் அதன் உள்ளே நுழைந்தனர். ஆனால், ஹமாஸ் இதை மறுத்துள்ளது.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை “ஒரு செயல்முறைக்கான தொடக்கம்” என்று விவரித்துள்ளார். ஹமாஸ் விடுவிக்கப்படவுள்ள மேலும் 13 பணயக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.


அக்டோபர் 7ஆம் தேதியன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது ஒரு தாக்குதலைத் தொடங்கியது. அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.


அதற்குப் பழிவாங்க இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அதில் 14,500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.