இராஜகோபுரம் பூர்த்தியாக்கப்படும்!




 


( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயமானது இந்திய சோழர்கால வம்சத்தினருடன் இணைந்து புதுப்பொலிவு பெறும்.
அதேவேளை ஆலயத்தின் ராஜகோபுரம் அழகாக பூர்த்தியாக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்   நம்பிக்கை தெரிவித்தார் .

திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹார நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அவ்வமயம் விஜயம் செய்த ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மாலை சூட்டி வரவேற்றார்.

அவருடன் கிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளர் ச.நவநீதன், பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் வரவேற்கப்பட்டனர்.

முதலில் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்.ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் அவருக்கு ஆசி வழங்கினார்.

பின்னர் சூரசம்ஹார நிகழ்வில் கலந்து கொண்டு பார்வையிட்டார். 

சூரசம்ஹார நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள்  ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றபோது அங்கு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள்  ஆளுநருக்கு ஆசி வழங்கினார்.

அதன் போது ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான பரிபாலன சபையினரும் உடனிருந்தனர். 

ஆலய சுற்று வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற சூரசம்ஹாரத்தில் முதல் தடவையாக பங்கேற்ற ஆளுநருடன் குழந்தைகள் முதல் பெரியோர் வரை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.