நூருல் ஹுதா உமர்
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர் கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் நான்கு ஜனாதிபதிகளை மூன்று பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தும் இதுவரை தம்முடைய குறைபாடுகள் நிபர்த்திசெய்யப்பட வில்லை என ஏக்கம் தெரிவிக்கின்றனர்.
அங்குள்ள வீதிகள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதையும், தரமற்ற அபிவிருத்திகள் மூலம் பாதைகள் உடைந்து காணப்படுவதையும் பலதடவைகள் அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கு எடுத்துரைத்தும் எவ்வித பயனும் கிட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர். மழைகாலங்களில் பாம்பு போன்ற நச்சு விலங்குகள் வீடுகளை நோக்கி படையெடுக்கும் நிலை உள்ளதாகவும் மக்கள் குறை கூறுகின்றனர்.
வீதிகளில் குளம் போன்று நீர் தேங்கி நிற்பனதால் பாதசாரிகளும், பாடசாலை மாணவர்களும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் அடிக்கல் நடப்பட்டு பல வருடங்கள் மற்றும் பல மாதங்கள் கடந்தும் வீதியபிவிருத்திக்கு நடப்பட்ட எந்த அடிகற்களும் இன்னும் செயலுருவம் பெறவில்லை என்று தெரிவிக்கின்றனர். வடிகான்கள் நீர் வடிந்தோடமுடியாதளவு மண்னால் அடைபட்டு இருப்பதுடன் டெங்கு உட்பட பல்வேறு நோய்களை உண்டாக்கும் தன்மைகொண்ட கொள்கலன்கள் வடிகான்களில் வீசப்பட்டும் காணப்படுகின்றது. வடிகான்களுக்கு பொருத்தமான மூடிகள் இடப்படாமையினால் சிறுவர்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திப்பதுடன் பெரியோர்களும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பில் கல்முனை மாநகர பொறியியல் பிரிவும், பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தபோக்குடன் செயற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உரிய அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்க முன்வரவேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
Post a Comment
Post a Comment