சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும்





மாளிகைக்காடு நிருபர்

தமிழ் மக்களின் பாரம்பரியமும், கலைநயமும் மிக்க பரதத்தை ஆண்களை மகிழ்விக்கும் விதமாக பரதநாட்டியம் ஆடப்படுவதாகவும், விலைமாதர்கள் ஆடும் நடனமாகவும் கொச்சையான வார்த்தைகளை கொண்டு ஒழுக்கங்கள் இன்றி கடும்போக்காக அப்துல் ஹமீட் ஸராயி மௌலவி அவர்கள் பேசியிருக்கும் அந்த விடயங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

இஸ்லாமியர்களினால் பல நூற்றாண்டுகளாக கடைபிடித்துவந்த பாரம்பரியமிக்க கலாச்சார, கலை, இலக்கிய மரபுகளை பிழைகண்டு அவற்றுக்கு எதிராக பேசி ஒழித்துக்கட்டி பாடசாலைகளில் சினிமா திரைப்படங்களின் குத்துப்பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டு பாடசாலை விசேட தினங்களில் ஆசிரியர்கள் நடனமாட இப்படியான உலமாக்களே கடந்த காலங்களில் காரணமாக அமைத்துள்ளார்கள். இதனால் எது எமது கலாச்சாரம் எது அந்நிய கலாச்சாரம் என்று அடையாளம் தெரியாமல் தமது ரசனைக்கு விருந்தானவற்றை செய்து ஆசிரியர்கள் மாணவர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஒழுக்கமான விடயங்களை போதிக்காமல் இப்படி பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டு ஆடியது கண்டிக்கத்தக்கது. இந்த சினிமா பாடல்களுக்கான நடனங்களை தமிழர்களின் பாரம்பரியமிக்க பாரத நாட்டியமாக விடயம் தெரியாமல் அப்துல் ஹமீட் ஸராயி மௌலவி பேசியிருக்கிறார். எதையோ பற்றி பேசவேண்டி விளைந்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பரதநாட்டியத்தை ஆண்களுக்கு உணர்வை தூண்டும் நடனமாக பேசியுள்ளார். இந்த விடயமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யபப்ட்டுள்ளது. இது விடயமாக பொலிஸார் சுயாதீன விசாரணை செய்து குறித்த உலமாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறான உலமாக்களை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள், மதரஸாக்கள் போன்றவற்றில் மார்க்க பிரச்சாரம் செய்ய அல்லது கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட கல்வி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு போன்றன நடவடிக்கை எடுக்கவேண்டும். மன்னிப்பு கேட்பதாக அவர் வெளியிட்ட காணொளியில் கூட அவர் தொடர்ந்து அந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார். தெரியாமல் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கும் விடயமறிந்தவர்கள் செய்யும் தவறுக்கு மன்னிப்பு வழங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

ஏனைய இனங்களின் மதகுருக்கள் எமது மார்க்கம் தொடர்பில் ஏதாவது பிழையான கருத்துக்களை முன்வைத்தால் கொதித்தெழும் இலங்கையின் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விஷயத்தில் மௌனம் காத்திருப்பது கவலையளிக்கிறது.

பிற சமூகங்களுடன் நல்லிணக்கமாக வாழ கற்றுத்தந்த மார்க்கத்தை பின்பன்றும் நாம் எமது சமூக உலமாக்கள் பிழை விட்டாலும் அதை சுட்டிக்காட்டவேண்டியது எமது கடமையாக உள்ளது. இதை செய்யாது மௌனம் காப்பது ஏனைய சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான விம்பத்தை உருவாக்கும்.

இப்படியான மௌனமான போக்குகள் எதிர்காலத்தில் எமக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் இதனை தவிர்க்கும் வகையில் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் குரலெழுப்ப வேண்டும் என்றார்.