நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 65 வருட பூர்த்தியை முன்னிட்டு அடுத்தவருடம் நடைபெறவுள்ள "நீல சபையர் விழா" தொடக்கமும் அது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடும், இலட்சனை அறிமுகமும் இன்று இரவு கல்லூரி மருதூர்க்கனி அரங்கில் பாடசாலை அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும், முன்னாள் அதிபருமான ஏ.எல்.ஏ.சக்காப், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை செயலாளர் பி.எம்.அறபாத், பழைய மாணவர் சங்க செயலாளர் சுகைல் ஜமால்தீன், பாடசாலை பிரதி அதிபர் எம்.பி. ராஜி ஆகியோர் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட அவர்கள், பாடசாலையின் வரலாற்றை மீண்டும் திரும்பிப்பார்க்கும் விதமாக குறித்த "நீல சபையர் விழாவை" ஒழுங்கமைத்துள்ளதாகவும் இந்த பாடசாலையிலிருந்தே முதலாவது நீதவான், நிர்வாக சேவை அதிகாரிகள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் போன்ற இதர முக்கியமான நிலைகளை பழைய மாணவர்கள் அடைந்துள்ளதாகவும் கல்வியிலும், விளையாட்டு, கலை, இலக்கியம் போன்ற பல போட்டிகளில் தேசிய சாதனையாளர்களாக பாடசாலை மாணவர்கள் மிளிர்ந்துள்ளார்கள் அவர்களை திரும்பிப்பார்க்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது என்றனர்.
மேலும் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பழைய மாணவர்களுக்கிடையில் விளையாட்டு போட்டிகள், கவியரங்கம், கண்காட்சி, ஸம்ஸியன் வோக் போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இந்த நிகழ்வினூடாக பல்வேறு இடங்களிலும் உள்ள இப்பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து பாடசாலையை தலைநகரில் உள்ள பிரபல பாடசாலைகளுக்கு நிகராக கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பு என்பவற்றுடன் ஊரின் முக்கிய பல அமைப்புக்களும் நலன்விரும்பிகளும் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் மாநகரசபை உறுப்பினரும், பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பின் உப தலைவருமான எம்.எஸ் உமர் அலி அவர்களும் கலந்து கொண்டார்.
Post a Comment
Post a Comment