பதிவாளர் பிரிவு சேவைகள் முடக்கம் , முறையீடு




 


ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் முடக்கம்: பிரதமர் தினேஷ் குணவர்த்தவிடம் முன்னாள் அமைச்சர் சுபைர் முறையீடு


ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதாகவும், இது குறித்து பிரதமரும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...


இலங்கையில் உள்ள சகல பிரதேசங்களிலும் உள்ள பதிவாளர் பிரிவுகளில் பிறப்பு இறப்பு மற்றும் விவாக விவாகரத்து சான்றுதழ்களை விரைவாகவும் Online ஊடாகவும் வழங்கும் முறைமை ஏற்படுத்தப்பட்டு அந்த சேவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இருந்த போதிலும் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சுமார் ஐந்து மாத காலமாக Local Government Wifi (LGN Wifi) செயலிழந்துள்ளதனால் பதிவாளர் பிரிவு சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. இதே பிரச்சினை செங்கலடி பிரதேச செயலகத்திலும் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு, விவாக, விவாகரத்து சான்றுதழ்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் அங்கு சேவையினை பெறுவதற்காக செல்லும் மக்கள் தினமும் ஏமாற்றத்துடனே திரும்பிச் செல்கின்றனர்.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் வேலையற்ற இளைஞர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்லுகின்ற நிலை அதிகரித்து வரும் இக்காலகட்டத்திலும் தங்களுக்கு தேவையான கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறான நிலையில் குறித்த பிரதேச மக்கள் மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று தங்களது பதிவு பிரதிகளை எடுக்க வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இதற்காக அதிகமான நிதிகளை செலவழித்து வருவதுடன் நீண்ட நேரம் காத்திருந்து குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டியதொரு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.


இந்த விடயமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரையில் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.


எனவே பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். குறித்த பிரதேச மக்களின் நலன் கருதி அந்த பிரதேச செயலகங்களில் வளமை போன்று பதிவாளர் பிரிவு இயங்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும். அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன் என்றார்.