மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (புதன், நவம்பர் 15) நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்த ஆட்டம் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்னமாகத் திகழ்ந்து வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் எந்தவிதமான பெரிய குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து அணிகளுக்கும் சவாலான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால்தான் 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.
நியூசிலாந்து அணியும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்து கொண்டு தொடக்கத்தில் அதிரடியாக பல வெற்றிகளைப் பெற்றது. ஆனால், சமவலிமை கொண்ட அணிகளுடன் மோதும்போது பல சறுக்கல்களைச் சந்தித்து, தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்த அரையிறுதி ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஏனென்றால் நியூசிலாந்து அணி இதுவரை பலமுறை அரையிறுதிச் சுற்றுக்குள் சென்றும் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
இந்தியாவைப் பொறுத்தவரை கோப்பையை வெல்லக்கூடிய அனைத்து தகுதிகளும் இருந்தும், கடந்த 2 உலகக்கோப்பைத் தொடர்களாக அரையிறுதியுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 18 ரன்களில் தோல்வி அடைந்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
Post a Comment
Post a Comment