நூருல் ஹுதா உமர்
கல்முனை தொகுதியில் சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை தொடர்ந்து இப்போது கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பு ஆரம்பித்துள்ளது. கலரிப்பின் பாதிப்பு நிலை தொடர்பில் மீனவ அமைப்புக்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களின் போது இது சம்பந்தமாகவும் ஜனாதிபதி செயலாளர், அரச உயர்மட்டங்கள், குறித்த இலாகாவுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்துக்கூறியிருந்ததன் பயனாக கரையோரம் பேணல் திணைக்கள கிழக்கு மாகாண பொறியியலாளர் எம்.துளசிதாசனை தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளின் பிரகாரம் கல்முனைக்கு இன்று (30) களவிஜயம் மேற்கொண்ட மாகாண பொறியியலாளர் எம். துளசிதாசன் அவர்கள் கரையோரம் பேணல் திணைக்கள கல்முனை பிரதேச செயலகத்திற்கான அதிகாரி எம்.எச்.மப்ரூக், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு மீன்பிடி உரிமையாளர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ். அப்துல் ஹமீட் (நஸீர்), மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுப்பது சம்பந்தமான மதிப்பீட்டறிக்கையை விரைவாக செய்து இவ் வேலைத்திட்டத்தை அவசரமாக முன்னெடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க தேவையான நிதியை பெறுவது தொடர்பில் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment