நீதி கோரினர்






நூருல் ஹுதா உமர்

நாவிதன்வெளி பிரதேச சபையினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போதும், ஏனைய பங்கீடுகளின் போதும் முஸ்லிம் பிரிவுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையைத் தருகிறது. விகிதாசார அடிப்படையில் எமக்கு வழங்கப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் மற்றும் பங்கீடுகள் உரிய முறைப்படி எமது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாவிதன்வெளி பிரதேச சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள் இணைந்து அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் நாவிதன்வெளி பிரதேசத்தில் 20 கிராம சேவகர் பிரிவு காணப்படுகின்றன. அதில் 8 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியவாறு முஸ்லீம்கள் 34.64% சதவீதம் வசித்து வருகின்றனர். ஆனாலும் நாவிதன்வெளி பிரதேச சபையூடாக மேற்கொள்ளப்பட்ட சில வேலைத் திட்டங்கள் பொருத்தமற்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டதால் இன்று அவை பாவனையற்று காணப்படுகின்றது. உதாரணமாக மத்தியமுகாம் சந்தைத் தொகுதி, சவளக்கடை சந்தைத் தொகுதி, சவளக்கடையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் போன்றவற்றை குறிப்பிடலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அந்த மகஜரில், அதுமாத்திரமின்றி கடந்த காலங்களில் முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகள் புறக்கணிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களில் சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. அதில், 5.2 கிலோமீட்டர் தொலைவிற்கு  LDSP (Local Development Support Project) திட்டத்தினூடாக அண்ணாமலை பிராந்தியத்திற்கு நீர் இணைப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ் வேலைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு கலந்துரையாடிய போது இதன் இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் முஸ்லிம் பிரிவில் மேற்கொள்வதென உடன்பாடு காணப்பட்டது. ஆனால் இரண்டாம் கட்ட வேலைத் திட்டம் உடன்பாட்டை மீறி சவளக்கடையில் பல்தேவைக் கட்டிடம் (கலாச்சார மண்டபம்) அமைக்கப்பட்டு வருகின்றது.

மட்டுமின்றி சவளக்கடை பொது விளையாட்டு மைதானம், சவளக்கடை பொது சந்தைத் தொகுதி, மத்தியமுகாம் பொது சந்தைத் தொகுதி போன்ற வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இவ்வருடத்திற்கான வேலைத் திட்டங்களிலும் முஸ்லிம் பிரதேசங்களைப் புறக்கணித்து தமிழ் பிரதேசங்களில் செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிகின்றோம். எனவே தயவு செய்து இவ்வருடத்திற்கான வேலைத் திட்டங்களில் நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.