கடந்த 30/09/2023 சனிக்கிழமை அதிகாலை வெலிகந்தை பொலிஸ் வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸ் குடியிருப்பு அறையில் ஏறாவூரைச் சேர்ந்த ஹனீஃபா எனும் பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் தற்கொலை என்றும் அவரே கண்ணாடித்துண்டினால் தனது கைகளைக் கீறியுள்ளார் என்ற அடிப்படையிலும் சொல்லிவந்த நிலையில் மரணித்த உடலைப் பார்வையிட்ட கெளரவ நீதிபதியும் அவரது குடும்பத்தினரும் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.
சனிக்கிழமை சம்பவம் இடம்பெற்றிருந்த போதும் விடுமுறை நாட்களாக இருந்ததனால் சனி,ஞாயிறு,திங்கள் கடந்து செவ்வாயே பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளது. சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் படி இது கொலை என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. வலது கையில் ஏற்படுத்தப்பட்ட ஆழமான காயம் காரணமாக அதிகளவான இரத்தம் வெளியேறி 90 செக்கன்களில் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு நாட்களின் பின்னர் ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் செவ்வாய் இரவு பெருந்திரளானவர்கள் கலந்து கொள்ள நல்லடக்கம் செய்யப்பட்டது.
பொதுவாகவே முஸ்லிம்கள் மரணித்த உடலை நீண்டநேரமாக வைத்துக்கொள்வதில்லை. உடனேயே அடக்கம் செய்துவிடுவார்கள். ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டால் கூட ஓரிரு தினங்களில் ஜனாஸாவைப் பெற்றுக்கொள்வார்கள். எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரணமானவர்களின் உடலைக்கூட விரைவாக பெற்றுக்கொள்ள முயற்சி செய்வார்கள். ஆனால் பொலிஸ் உத்தியோகத்தரின் ஜனாசா நான்கு நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பணியாற்றிய ஒருவரின் ஜனாசாவை அவசரமாக பிரேத பரிசோதனை செய்து மீட்டுக்கொள்வதற்கு அரசியல் தரப்போ அல்லது ஏனைய துறையினரோ கவனம் எடுக்கவில்லை என்பது மாறாத வடுவாக பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு இருக்கலாம்.
குறித்த சம்பவம் சிறுபான்மையினர் அதிகளவில் வசிக்கும் பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நடந்திருக்குமானால் ஏகப்பட்ட நெருக்குவாரங்களை சந்திக்கவேண்டி ஏற்பட்டிருக்கும். பாராளுமன்றத்தில் பேசுபொருளாகியிருக்கும். ஒவ்வொரு வீடாக எதையெதையோ சொல்லி சல்லடை போட்டு தேடியிருப்பார்கள்.
பொலிஸ் நிலையத்தில் பொலிசாருக்கே பாதுகாப்பில்லாத நிலையில் இந்த நாட்டில் சாதாரணமானவர்களின் பாதுகாப்பு நிலையை என்னவென்பது. ஒவ்வொரு நாளும் கொலையும் கொள்ளையும் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக இவ்விடயம் பெரிய அளவில் ஊடகங்களின் கவனத்தையும் பெறவில்லை அல்லது திட்டமிட்டுத்தான் இவ்விடயத்தை பெரிதுபடுத்தவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. தற்போது மனித உரிமை செயற்பாட்டாளர் முஹிட் ஜீரான் போன்றவர்கள் இவ்விடயத்தில் அக்கறையுடன் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
கொலை என்பதை உறுதிப்படுத்தவே நான்கு நாட்கள் சென்றிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிசாருக்கு பொலிஸ் பகுதிகளுக்குள்ளேயே பாதுகாப்பில்லாத நிலை. இக்கொலை தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெறவேண்டும். கொலையாளிகளும் அதற்கு உடந்தையானவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கப்பெறல் வேண்டும். இல்லையெனில் பொலிஸ் திணைக்களத்துக்கு இன்னுமொரு அவப்பெயராகவே இதுவும் கடந்து போகும்.
இக்கொலை தொடர்பாக உரிய தரப்பினருக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கு எல்லோரும் முன்வருதல் அவசியம்.
இந்த தேசம் வாழத்தகுதியானது என நம்புவோம். எல்லாவற்றையும் விட மனித உயிர்கள் மேலானவை என்பதையும் நம்புவோம்.
Post a Comment