(பாறுக் ஷிஹான்)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறியின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில் அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக அம்பாரை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் களுஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பிரதம அதிதி உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கல்முனை சிங்கள மகா வித்தியாலய அதிபர் திசாநாயக்க டட்லியின் வரவேற்பு உரையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் நிகழ்வை அலங்கரித்திருந்தது.
வரவேற்புரையினை தொடர்ந்து சிறுவர்களின் கண்கவர் நடனம் உட்பட அதிதிகளினால் 39 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சிறார்களை மகிழ்விக்கும் முகமாக இராணுவத்தினரால் பாடல்கள் பாடப்பட்டதுடன் பகல் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment