தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு!
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டிற்கான முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி நிகழ்நிலை ஊடாக இம்மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நேரடியான கல்வி நடவடிக்கைகளுக்காக இம்மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அழைக்கப்பட்டமையே இந்நிகழ்வின் தார்ப்பரியம் ஆகும்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் முதலாம் வருட மாணவர்களாக நானூறு மாணவர்கள் இவ்வருடம் கலை கலாசார பீடத்திற்கு உள்வாங்கப்பட்டமை சிறப்பிக்குரியது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் சமய அனுஷ்டானத்தைத் தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றது. இவ்வரவேற்புரையினை சமூகவியல் துறைத் தலைவரான பேராசிரியர் எஸ்.எம். அய்யூப் அவர்கள் நிகழ்த்தினார். மேலும் நிகழ்வின் தலைமையும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் எம்.எம். பாசில் பீடம் பற்றிய அறிமுகத்தை நிகழ்த்தினார்.
அந்தவகையில் பல்கலைக்கழகத்தில் உள்ள பீடங்கள் பற்றியும் கலை கலாசார பீடத்தில் காணப்படுகின்ற எட்டு கல்வித்துறைகள், அங்கு வழங்கப்படுகின்ற பொது மற்றும் சிறப்பு கற்கைநெறிகள், பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகள், உட்கட்டுமான வசதிகள், மனித வளங்கள், ஏனைய கல்வி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் பீடாதிபதி எடுத்துரைத்தார். இதன்போது, கலை கலாசார பீடத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கை உட்பட அங்கு வழங்கப்படுகின்ற டிப்ளோமா, சான்றிதழ் கற்கைநெறிகள் மற்றும் ஏனைய பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து துறைத் தலைவர்கள் சார்பில் அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் உரையாற்றினார். கடுமையான போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட இம்முதலாம் வருட மாணவர்களை வாழ்த்தியதுடன் இம்மாணவப் பருவத்தை தனியே கல்வி நடவடிக்கைகளுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்ளாது பிரத்தியேக செயற்பாடுகளையும் உள்வாங்கி அவர்களது திறமை மற்றும் ஆளுமைகளை விருத்தி செய்ய வேண்டும் என்ற விடயத்தையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, நிகழ்வின் பிரதம அதிதியான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அங்குரார்ப்பண உரையை நிகழ்த்தினார். இன்றைய தொழிற்சந்தைக்கு ஏற்றாற் போல் கல்வி நடவடிக்கைகள் மாற்றப்பட வேண்டும் என்பதற்கிணங்க பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டினார். தனியே கல்வியுடன் நிறுத்தி விடாது, திறமையை வளர்ப்பதன் மூலமே தொழிற்சந்தைக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்க முடியும். இதற்கு இப்பல்கலைக்கழகமும் கலை கலாசார பீடமும் பங்களிப்பு செய்வதை இங்கு குறிப்பிட்டார். அத்துடன் உலக வங்கியின் நிதி உதவியினூடாக கலை கலாசார பீடம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் நவீன சாதனங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்றும் இவற்றைப் பயன்படுத்தி, திறன் உள்ள மாணவர்களாக வருவதற்கான வாழ்த்துக்களையும் உபவேந்தர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மொழிகள் துறையின் மூத்த பேராசிரியரான எம்.ஏ.எம். றமீஸ் அவர்கள் இப்பல்கலைக்கழகம் மிகச்சிறந்த ஒரு நூலகத்தை கொண்டிருப்பதுடன் கலை கலாசார பீடத்தின் துறைகளும் தனித்தனியான நூலகங்களை கொண்டிருப்பதையும் இங்கு குறிப்பிட்டார். அவற்றை சிறப்பாக பயன்படுத்துவதன் ஊடாக மாணவர்கள் பயன்களை பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்.
மாணவர்கள் சார்பில் மாணவப் பேரவையின் செயலாளர் அஃரப் அவர்கள் அடுத்ததாக உரையாற்றினார். இவர் உரையாற்றும் போது, பல்கலைக்கழகத்திலும் கலை கலாசார பீடத்திலும் மாணவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.இறுதியாக, நன்றியுரை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இவ்வங்குரார்ப்பண நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் முக்கிய பாத்திரமான கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் திரு. எம்.ரீ. அகமட் அஸ்ஹர் நன்றியுரையை வழங்கியதோடு கலை கலாசார பீட மாணவ பேரவையினால் தயாரிக்கப்பட்ட ‘செயல்’ குறுந்திரைப்படம் புதுமுக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பீடத்தின் உறுப்பினர்களுக்கும் காண்பிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.
Post a Comment
Post a Comment