சர்வதேச ஆசிரியர் தின அன்பளிப்புப் பொருட்களுக்கு தடை விதித்த சாய்ந்தமருது பாடசாலை !





 (நூருல் ஹுதா உமர்)


வருடா வருடம் ஒக்டோபர் 6 ஆந் திகதி எமது நாட்டில் ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றன. இத்தினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தனியாகவும், குழுக்களாகவும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதனால் வகுப்பறைகளில் வறிய மாணவர்கள் பல்வேறு விதமான மன உளைச்சலுக்கும் சவால்களுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் முகங்கொடுக்கின்ற அதேவேளை இன்றைய பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் பெற்றோர்களாகிய நீங்களும் பல சங்கடங்களுக்கு உட்படுகின்றீர்கள்.

எனவே, கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கோ அல்லது அதிபருக்கோ எந்தவிதமான அன்பளிப்புப் பொருட்களையும் இரகசியமாகவோ அல்லது பரகசியமாகவோ வழங்குவதற்கு பாடசாலை முகாமைத்துவக் குழு தடைவிதித்துள்ளது என சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளார்.

அவரது அறிவித்தலில் மேலும், பெற்றோர்களாகிய நீங்கள் ஆசிரியர் தினத்திற்காக உங்களது பிள்ளைகளிடத்தில் பணமாகவோ அல்லது பொருளாகவும் எதனையும் கொடுத்து அனுப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுகிகொள்கின்றேன். அவ்வாறு மீறி அனுப்பிவைக்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உங்களது ஆசிரியர் தின அன்பளிப்புக்கள் எமது ஆசிரியர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் நீடித்த ஆயுளுக்காகவும் பிரார்த்தனைகளாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.