#Firthowze
பிரான்சில் நடைபெறும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்கும் சட்டத்தரணி Ajra Azhar அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹர் புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டு, புத்தளம் பாத்திமா பெண்கள் தேசிய பாடசாலையில் கலைப்பீடத்தில் உயர் கல்வியை தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தில், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகமயமாக்கலில் முதுமானி பட்டம் பெற்றவர்.
இவர் கல்வியில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், கொழும்பு பல்கலைக்கழகத்தின், சட்டபீடத்தில் வருகை விரிவுரையாளராகவும் (visiting lecturer), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், சட்டபீடத்தில் உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அஜ்ரா அஸ்ஹர், தனது ஐந்தாண்டு தொழில் துறையில், சட்ட ஆராய்ச்சி (legal research), திட்ட முகாமைத்துவம் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தி, தற்போது சட்டத்தரணியாக பணிபுரிந்து வருவதுடன், கொழும்பு அசோசியேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகிறார்.
மேலும் இவர் தனது தொழில் துறையைத்தாண்டி, பல்வேறுபட்ட திட்டங்களுக்காக, பல உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு ஆலோசகராக செயல்பட்டமை சிறப்பாக குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. தனது தன்னார்வப் பணியின் மூலமாக சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த அஜ்ரா அஸ்ஹர் செயல்பட்டுவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சட்டத்தரணி அஜ்ரா அஸ்ஹர், சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் (International Bar Association) வருடாந்த கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான மதிப்புமிக்க முழு புலமைப்பரிசிலை பெற்றுள்ளார்.
இந்த விருது சட்டத்துறையில் அவரது சிறந்த பணிக்கான ஓர் அங்கீகாரமாகும். அவர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 3, 2023 வரை பிரான்சின், பாரிஸில் நடைபெறும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்.
சட்டத்துறையில் அஜ்ரா அஸ்ஹரின் பயணம் மற்றும் வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது.
Post a Comment
Post a Comment