சேவை நலன் பாராட்டு நிகழ்வு




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 கல்வித்துறையில் 37 வருடங்கள் கடமையாற்றி திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆங்கிலப்பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் ஓய்வு பெற்றுச் செல்லும் செல்வி கமலாதேவி கேசகப்போடி அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் பாடசாலை மண்டபத்தில் நேற்று (24) மிகவிமர்சையாக இடம்பெற்றது.
சிரேஸ்ட ஆங்கிலப்பாட ஆசிரியரும் பாராட்டு நிகழ்வு இணைப்பாளருமான சா.லோகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓய்வு பெறும் செல்வி கமலாதேவி கேசகப்போடி கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி மயூரி மயூரன் மற்றும் விசேட அதிதிகளாக ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் பாடசாலை அதிபர் ஆர்.ரவிலேகா கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய அதிபர் எம்.சண்டேஸ்வரன் உள்ளிட்ட திருக்கோவில் வலய ஆங்கிலப்பாட ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் பான்ட் வாத்திய குழுவினரின் இசையோடு பாடசாலையின் பிரதான வீதியில் இருந்து அழைத்துவரப்பட்ட ஓய்வு பெற்றுச் செல்லும் உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி கமலாதேவி உள்ளிட்ட அதிதிகள் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு மாணவர்களின் வரவேற்பு நடன கலை நிகழ்வுகளும் ஓய்வு பெற்றுச் செல்லும் உதவிக்கல்விப்பணிப்பாளரை வாழ்த்தும் வாழ்த்துரையும அதிதிகள் உள்ளிட்ட ஆசிரியர்களினால் இடம்பெற்றது.
இதேநேரம் ஓய்வு பெற்றுச் செல்லும் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆசிரியர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதியினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இறுதியாக ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து வாழ்த்துப்பாவினையும் வழங்கி கௌரவித்ததுடன் ஓய்வு பெற்றுச் செல்லும் உதவிக்கல்விப்பணிப்பாளரின் ஏற்புரையுடன் நிகழ்வு இனிது நிறைவுற்றது.
தனக்கு வழங்கப்பட்ட பாராட்டிற்கு நன்றி தெரிவித்த அவர் இந்த பாராட்டைவிட தன்கீழ் பணியாற்றிய ஆசிரியர்கள் எதிர்காலத்தில் கல்வித்துறையில் படைக்கும் சாதனைகளும் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் செய்திகளும் தன் காதில் விழுகின்றபோதே  உண்மையான மகிழ்ச்சியினை அடைந்து கொள்வேன் எனவும் குறிப்பிட்டார்.