பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு





 நூருல் ஹுதா உமர்


இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் 2023 ஒக்டோபர் மாதம் தனது 42ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இதனடிப்படையில் 2023 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதிவரை பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாரத்தை சிறப்பிக்கும் வகையில் இப்பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்காக ஒக்டோபர் 3ஆம் திகதி 'Open Day - திறந்த தினம்' எனும் பெயரில் ஒரு தினத்தை நடாத்த பல்கலைக்கழக சமூகம் முடிவு செய்துள்ளது. இந்நிகழ்வு இப்பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகம் அப்பிராந்திய வளர்ச்சிக்கான ஒரு இயந்திரமாக செயல்படுகிறது. திறந்த தினம் என்பது பொதுமக்கள் பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பார்க்கவும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளவும், அமர்வுகளில் பங்கேற்கவும் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பரந்த அளவிலான கல்வித் திட்டங்கள் மற்றும் கல்வி வாய்ப்புகள் பற்றிய அறிவைப் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளது.

இச்சிறப்பு நிகழ்விற்கு பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், தொழில் முயற்சியாளர்கள், விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் மற்றும் சிறுதொழில்துறையினர் சார்ந்த சமூகத்தை பல்கலைக்கழகத்திற்கு வருகை தருமாறு பல்கலைக்கழக நிருவாகம் அழைப்பு விடுக்கின்றது. இத்தினத்தில் பங்குபற்றுவோருக்கு பின்வரும் விடயங்கள் தொடர்பாக பெறுமதியான விளக்கவுரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, அறிவியல் சோதனைகள் தொடர்பான நடைமுறை விளக்கங்கள் மற்றும் செயல் விளக்கங்கள், கல்விச் சூழலின் கண்ணோட்டம், நூலக வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவூட்டல், பல்கலைக்கழக மாணவர் அனுமதி நடைமுறை குறித்த வழிகாட்டுதல், பல்கலைக்கழக வாழ்க்கை மற்றும் கல்வி வாழ்க்கையின் வேறு அம்சங்கள் போன்ற விடயதானங்களில் விளக்கவுரைகள் வழங்கப்படவுள்ளன.    

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இச்சிறப்பு நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பிற சமூகங்களின் பங்கேற்பை பல்கலைக்கழக சமூகம் வரவேற்கின்றது. இதனூடாக பொதுமக்கள் பல்கலைக்கழக நடைமுறை தொடர்பான அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது.