விசேட துஆப் பிரார்த்தனை





 நூருல் ஹுதா உமர்


மறைந்த முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தருமான கல்விமான் எம்.எம்.எம்.முஸ்தபாவுக்கு (மயோன்) மறைவான காயிப் ஜனாஸாத்தொழுகையும், விசேட துஆப்பிரார்த்தனையும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் நேற்று (01) இடம்பெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அல்ஹாஜ் மௌலவி டி.ஆர்.நௌபர் அமீன் அவர்களினால் ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டு, துஆப்பிராத்தனையும் இடம்பெற்றது.

இதன் போது கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப்  பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.அஸீஸ் கலந்து கொண்டு நினைவு உரையாற்றுகையில்,

மக்களுக்காக அரசியலில் பயணத்தை ஆரம்பித்தவர் மறைந்த முன்னாள் உயர்கல்விப் பிரதிய்மைச்சர் அல்ஹாஜ் எம்.எம்.மயோன் முஸ்தபா தனது செல்வத்தின் மூலமும் தனது அரசியல் பதவியின் மூலம் மக்கள் பணிக்காக உயர்வினைக்கண்டும், பல சிரமங்களை எதிர்கொண்டும் இறுதி வரை மக்களுக்கு உதவியினைச் செய்தவராவார்.

கல்முனை பிரதேச மக்களுக்கு பல திட்டங்களை மக்கள் நலனுக்காக அறிமுகஞ்செய்தவர். இப்பிரதேச மாணவர்களின் நலன்கருதி கணனி கல்வியினை கொண்டு வந்தவர் இதன் மூலம் பலர் பயன்பெற்றனர். மேலும், வெளிநாடு செல்வோருக்கு பயன்பெற வேண்டி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினை எமது பிரதேசத்தில் அமைத்து அதில் எமது பிரதேச மக்களும் நாட்டு மக்களும் பயன் பெற்றதுடன், எமது பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள பொதுச்சந்தையினை ஆரம்பித்து வைத்து பங்களிப்புச் செய்தவராவார் எல்லோருடனும் மிகவும் என்றும் அன்புடன் இருந்தவர் இவருக்காகப் பிரார்த்திப்போம் என்றார்.

இதன் போது முன்னாள் உயர்கல்விப் பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எம்.மயோன் முஸ்தபாவின் புதல்வர் ரிஸ்லி முஸ்தபா மற்றும் குடும்பத்தினர் அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் மறைந்த முன்னாள் உயர்கல்விப் பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எம்.மயோன் முஸ்தபா பல்வேறு சேவைகள் புரிந்து மக்கள் மக்கள் மனதில் நீங்காத ஒரு அரசியல்வாதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.