நூருல் ஹுதா உமர்
விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவாக கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி சென்ற நினைவேந்தல் ஊர்வலத்தின் போது ஊர்வல வாகன தொடரின் மீது திருகோணமலையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அதனுடன் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் நடைபெற்றது சரியா பிழையா என்ற விவாதத்தை ஒருபுறம் வைத்து விட்டு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் சார்பில் நினைவேந்தல் ஊர்வலம் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுவதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஊர்வலம் நடத்தப்பட்டமை பல்வேறு கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தின் ஊடாக இவ்வாறான ஊர்வலம் நடத்துவது மோதலை உருவாக்கும் சதியா என்பதை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் தங்கம் கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது போன்று பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னின்று நினைவேந்தல் ஊர்வலம் நடத்தி உள்ளமை தொடர்பில் இலங்கை நாடாளுமன்றமும், சபாநாயகரும் பக்கச்சார்பின்றிய விசாரணை நடத்த முன்வர வேண்டும்.
அதாவது ஜனநாயகத்தை நிராகரித்து ஆயுதம் ஏந்தியவர்கள் ஜனநாயக விரோதமாகக் கருதப்படுவார்கள், எனவே ஜனநாயகத்தை விரும்பும் அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் மக்களைக் கொண்டாட வேண்டுமே தவிர பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகளை கொண்டாட கூடாது. இப்படி ஜனநாயக முறையில் போராடிய தலைவர்களை இப்போதைய அரசியல் தலைவர்கள் கொண்டாடினால் விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு கொடூரமானது என்பதை மக்கள் உணர்ந்து, பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜனநாயக தலைவர்களை மாவீரர்களாக மதிப்பார்கள். என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment