துஆ பிரார்த்தனை




 


நூருல் ஹுதா உமர்


திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சருமான மர்ஹும் எம்.எம்.எம்.முஸ்தபா (மயோன்) அவர்களுக்கான நினைவேந்தலும், துஆ பிரார்த்தனையும், சாதனை மாணவிகள் கௌரவிப்பும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) பதினோராவது (11) அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களின் தலைமையிலான முதலாவது பொது காலை ஆராதனை ௯ட்டமும் திங்கட்கிழமை (04) கல்லூரி பொது வெளியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு விஷேட விருந்தினராக இக்கல்லூரியில் இருபத்தி ஆறு வருடங்கள் கல்வி வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட முன்னாள் அதிபர் ஏ.ஏச்.ஏ. பஷீர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மர்ஹும் எம்.எம்.எம்.முஸ்தபா (மயோன்) அவர்களுக்கான துஆ பிரார்த்தனை மெளலவி எம்.எம். ஜமால்தீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் அண்மையில் இடம்பெற்ற கல்முனை கோட்டமட்ட மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சியில் முதலாம் நிலையினை பெற்ற மாணவிகளுக்கும், 1000க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டி பரீட்சை - 2023 முதலாம் நிலையில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் மற்றும் இலங்கை மாதிரி ஐக்கிய நாடுகள் (Sri Lanka model united Nations) 16 வது அமர்வு நிகழ்வில் பங்கு பற்றிய மாணவிகளுக்கான சான்றிதழ்களை விஷேட அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் அதிபர் அல்ஹாஜ் ஏ.ஏச்.ஏ. பஷீர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.