நூருல் ஹுதா உமர்
உலக வாழ் மனிதர்களின் வாழ்வுக்கு நேர்வழிகாட்டிய முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாத் தினத்தை இலங்கை வாழ் முஸ்லிங்கள் மட்டுமின்றி உலகம் பூராகவும் அமைதியான முறையில் இறை வழிபாடுகளுடனும் சமய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் முஸ்லிங்கள் கொண்டாடுகின்றனர்.
அதனை கௌரவிக்கும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு உலகிற்கு அமைதியான மார்க்கத்தை அருளிய உன்னத நபியின் பிறந்தநாளை மாண்புடன் கொண்டாடும் விதமாக வர்த்தக விடுமுறையாக அறிவித்து கௌரவித்துள்ளது.
அந்த வர்த்தக விடுமுறைகளைப் பெறுவதற்கு தாராள மனப்பான்மை கொண்டு முயற்சித்த முஸ்லிங்களின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சேர் றாஸிக் ஃபரீத் அவர்களை நாம் மறந்துவிட முடியாது என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்லாம் வழியாக நபிகள் நாயகம் மூலம் வழங்கப்பட்ட ரமழான், ஹஜ் போன்ற பண்டிகை விடுமுறைகள் சாதாரண விடுமுறையாக இருக்கும் நிலையில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் விழா விடுமுறையை வர்த்தக விடுமுறையாக மாற்றுவது அக்கால முஸ்லிம் தலைவர்களின் மார்க்கப் புரிதலாகும்.
அவர்கள் முஸ்லிம் சமூகத்தை சரியான மார்க்கப் பாதையில் வழிநடத்திய காரணத்தினால் அன்றைய முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகள் கூட சரியான பாதையில் அமைந்திருந்தன.
அந்தத் தலைவர்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை அரசின் மூலம் தேசிய மீலாதுன் நபி சமய கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததால் முஸ்லிம் சமூகத்திற்கான சமய கலாசார அமைச்சின் தேவை பூர்த்தியானது.
தேசிய மீலாதுன் நபி நிகழ்ச்சிகளின் ஊடாக இலங்கை அரசாங்கத்தினால் முஸ்லிம் கிராமங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்வது இந்நாட்டு முஸ்லிம்கள் பெருமானார் நபிகள் நாயகத்தின் ஊடாக பெற்றுள்ள கொடைகளை எடுத்துக்காட்டுகின்றது.
நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒப்பந்தச் சித்தாந்தங்கள், தப்பான எண்ணங்களையும், கொள்கைகளையும் கொண்டுவந்து செய்த அட்டூழியங்கள் எல்லாம் இறைவனின் உதவியுடன் கடந்த காலங்களில் அடக்கப்பட்டதுடன் கொள்கைகள் முரண்பட்ட முகவர்களுடன் சேர்ந்து கொண்டு சில அரசியல்வாதிகளும் அதற்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்த முயன்றும் அது தோல்வியிலையே முடிந்தது.
அப்படியான நெறிதவறியவர்களின் மூலமே ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றது. இப்படியானவர்களினால் நபிகளாரின் அமைதியான வாழ்வுக்கும் தூய இஸ்லாத்திற்கும் கரும்புள்ளி சேர்கிறது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல், சமயத் தலைவர்கள் நபிவழியில் வருங்கால சந்ததியினரை வழிநடக்க நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment