தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கில பேராசிரியரானார் ஏ.எம்.எம். நவாஸ்!




 


(நூருல் ஹுதா உமர்.)

பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கிலப் பேராசிரியராவதோடு, பேராசிரியர் ரைஹானா ரஹீமைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களில் இரண்டாவது ஆங்கிலப் பேராசிரியரும் ஆவார்.

1969 ஜூலை மாதம் பிறந்த அப்துல் மஜீட் முகம்மது நவாஸ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவையால் 29.09.2021 முதல் ஆங்கிலப் பேராசிரியராக (ELT) நியமிக்கப்பட்டுள்ளார்.

மருதமுனையைப்பிறப்பிடமாகக் கொண்ட இவரது தந்தை, மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் ஆகவும், மருதமுனை பொது நூலகத்தின் நிறுவனரும், மருதமுனை கல்முனை பொது நூலகத்தில் நூலகராகவும் பணியாற்றியவர் ஆவார்.

பேராசிரியர் நவாஸ் தனது ஆரம்பக் கல்வியை அல்-மனார் மத்திய கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் பெற்றார். அங்கு அவர் 1983 இல் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும், 1987 இல் விஞ்ஞானப் பிரிவில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றார். 1990 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டித் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்று ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

இவர் 1995 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் (Second class Hons) பெற்றார். அதனைத் தொடர்ந்து, அவர் 1996 இல் விவசாய பீடத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

 மேலும் 1997 ஏப்ரல் மாதம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிரந்தர ஆங்கில பயிற்றுவிப்பாளராக (Instructor) நியமிக்கப்பட்ட இவர், 1997 மே மாதம், அதே பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மேலும் 2005 இல் உறுதிப்படுத்தப்பட்ட விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்ற இவர் சிரேஷ்ட விரிவுரையாளர் - II மற்றும் I ஆகிய பதவிகளுக்கு முறையே 2012 மற்றும் 2016 இல் பதவி உயர்த்தப்பட்டார். தற்போது அவர் 26 ஆண்டுகளுக்கும் மேலான பல்கலைக்கழக கற்பித்தல் அனுபவத்தையும், 7 வருட பாடசாலைக் கற்பித்தல் அனுபவத்தையும் பெற்றுள்ளார்.