விசேட தேவையுடைய மாணவர்களுக்கு போதிய வசதி செய்து கொடுக்க வேண்டியுள்ளது
மாளிகைக்காடு நிருபர்
விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி சிறுவர்கள், மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலைகள் அந்த பிள்ளைகள் கல்விகற்க ஏதுவான இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது. அவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டிய தேவைகள் தொடர்பிலும், அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கவேண்டிய அவசிய தேவைகள் தொடர்பிலும் அரச உயர்மட்டங்களுக்கு தான் முன்மொழிவுகளை முன்வைக்க உள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் கடந்த தவணை பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்று முதல்நிலை அடைந்த சாய்ந்தமருது கமு/கமு/ ரியாழுள் ஜன்னா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், இப்போது பாடசாலைகளில் நிறைவான இளம் ஆசிரியர்கள் உள்ளார்கள். அவர்கள் புத்தகங்களை மட்டும் அன்றி தேடல்கள் நிறைந்தவர்களாகவும் உள்ளனர். இப்படியான தேடல்மிக்க ஆசிரியர்களிடம் கல்விபயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக மிளிர்வார்கள். அந்தவகையில் சாய்ந்தமருது கமு/கமு/ ரியாழுள் ஜன்னா வித்தியாலயம் இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளை விட இறைவனுக்கும் சமூகத்துக்கும் நெருக்கமான பாடசாலையாக உள்ளது. இங்கு கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த மாணவர்களை கையாளும் ஆசிரியைகள் தாய்க்கு நிகராக அவர்களை கவனிப்பது ஆசிரியப்பணிக்கு மகுடமாக அமைந்துள்ளது.
விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி சிறுவர்கள், மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலைகள் அந்த பிள்ளைகள் கல்விகற்க ஏதுவான இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது. இப்பாடசாலையிலும் அப்படியான தேவைகள் பூர்த்திசெய்யப்பட்ட வேண்டியுள்ளது. அவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டிய தேவைகள் தொடர்பில் அரச உயர்மட்டங்களுக்கு தான் முன்மொழிவுகளை முன்வைக்க உள்ளேன். பின்தங்கிய, கரையோரப்பிரதேச மாணவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் எனும் பொதுவான கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. அம்பாறை மாவட்டத்திலும் சரி ஏனைய கரையோர பிரதேசங்களிலும் சரி கரையோரத்தை சேர்ந்த பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் கடந்த காலங்களில் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கல்விக்கு ஏழ்மை தடையல்ல என்பதை கடந்த காலங்களில் சாதித்த பலருடைய சாதனைகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் என்றார்
தமிழ் தினப்போட்டியில் பல்வேறு அடைவுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக பாடசாலை இணைப்பாளர் எம்.எம். ஷியாம், தொழிலதிபர் எம்.எம். ரஸீன் உட்பட பாடசாலை உப அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment