மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சம்மாந்துறை சுவிகரித்தது




 


அஸ்ஹர் இப்றாஹிம்)


சாய்ந்தமருது நண்பர்கள் வட்டம் ஒழுங்கு செய்திருந்த  20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த வெள்ளிக்கிழமை (25 ) சாய்ந்தமருது பொலிவேரியன்   விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 32 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற மேற்படி கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த 6 மாத காலமாக இடம்பெற்று  வந்த நிலையில்   இறுதிப் போட்டி சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும், சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பாடிய சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் 15.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.  
 
பரிசளிப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் மர்ஹும் .ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர்  கலந்து சிறப்பித்தார்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை விளையாட்டுக்கழகத்திற்கு  70,000 ரூபா பணப்பரிசும், சம்பியன் கிண்ணமும், 2 ஆவது இடம்பெற்ற சாய்ந்தமருது  பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 30,000 ரூபா பணப்பரிசும்  வழங்கப்பட்டதுடன், சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தின் அணித் தலைவர் எச்.ஆர்.எம்.இஸ்மத் அவர்களுக்கு 7500 ரூபா பணப்பரிசும் நினைவுச் சின்னமும்,  இறுதிப் போட்டியின் சிறப்பாட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட அதே அணியைச் சேர்ந்த எஸ்.எம்.அfப்ஹாம் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன்  இறுதிப் போட்டியில் பங்கு பற்றிய இரு அணி வீரர்கள் பதக்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.