வாழ்த்துக்கள்




 


இலங்கையின் முதலாவது முஸ்லிம் இயன் மருத்துவத்துறை (Physiotherapy) விரிவுரையாளராக நிந்தவூரைச் சேர்ந்த அப்துல் மஜீது முகம்மது றிகாஸ் நியமனம்.


18-07-2023


- ஏ. ஷபாஅத் அஹமட் -


நிந்தவூர் - 06 ம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீது முகம்மது றிகாஸ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் (Dept.of Allied Health Science) இயன் மருத்துவத்துறை நிரந்தர விரிவுரையாளராக (Lecturer in Physiotherapy) நேற்றைய தினம் (18.07.2023) காலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.


விரிவுரையாளர் முகம்மது றிகாஸ் இலங்கையின் இயன் மருத்துவத்துறை பட்டப்படிப்பு வரலாற்றில் முதலாவது முஸ்லிம் விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிந்தவூர் - 06ம் பிரிவு மீராசாஹிபு அப்துல் மஜீது - மர்ஹும் மிஸ்கின்பாவா உம்மு சல்மா தம்பதியரின் புதல்வரான முகம்மது றிகாஸ் தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலயத்திலும், உயர் தரக் கல்வியை நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையிலும் பயின்று 2014ம் வருடம் வெளியான க. பொ. த. உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் இயன் மருத்துவத்துறைக்கு (Physiotherapy) தெரிவாகியிருந்தார்.


பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளிலும் பிரகாசித்த இவர் இயன் மருத்துவத்துறை இறுதியாண்டு பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதியுயர் சித்திகளுடன் பேராதனை பல்கலைக்கழகத்திலேயே இயன் மருத்துவத் துறையில் முதலாமவராகத் தெரிவானார்.


2019ம் வருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது இயன் மருத்துவத் துறையில் முதலாம் வகுப்பு (First Class) சித்தியுடன் மருத்துவ நடைமுறைகளுக்கான சிறப்புத் தங்கப் பதக்கத்தையும் (Award of Excellence in Clinical Practice in Physiotherapy) பெருமையுடன் பெற்று தனது இளமானி பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.


தனது பட்டப்படிப்பின் இறுதியாண்டு காலப்பகுதியில் எதிர்பாராதவிதமாக தனது தாயாரை இழந்த துயரத்திலும் பெரும் மனப்போராட்டங்களுக்கு மத்தியிலும் தனது இலக்கின் குறி தவறாது முனைப்புடன் தனது பரீட்சையை எழுதி முடித்தார்.


பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார பீடத்திலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திலும் தற்காலிக விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளதுடன் தற்போது தனது தாய் பல்கலைக்கழகமான பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே நிரந்தர விரிவுரையாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நமது நிந்தவூரின் புதல்வரான முகம்மது றிகாஸ் அவர்களுக்கு Ceylon24 நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.


அவர் மென்மேலும் தனது துறையில் பிரகாசிக்க எமது பிரார்த்தனைகள்.