நூருல் ஹுதா உமர்
வடமாகாண முஸ்லிம் பாடசாலைகளின் விவகாரங்களை கையாள முஸ்லிம் கல்வி பணிப்பாளர் ஒருவர் வடமாகாண கல்வித் திணைக்களத்தில் அவசியம் நியமனம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சரை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் குடியமர்த்தப்பட்ட பின்னர் முஸ்லிம் பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் அங்கு முஸ்லிம் பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறை
மற்றும் வளப்பற்றாக்குறை என்பன நிலவுகிறது. இஸ்லாம் கற்பிக்க ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வில்லை. அண்மையில் வடமாகாணத்தில் இருந்து 10 இஸ்லாம் பாட கல்விக் கல்லூரி டிப்ளோமாதாரிகள் ஆசிரியர்களாக வெளியேறிய போதும் ஒருவர் கூட வடமாகாணத்திற்கு நியமனம் செய்யப்படாத வகையில் அப்பாடத்திற்கு வெற்றிடமில்லையென வடக்கு மாகாண கல்வியதிகாரிகளால் மத்திய கல்வி அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளை சீர் செய்ய வடமாகாண கல்வித் திணைக்களத்திலும், வடமாகாண கல்வி அமைச்சிலும் ஒவ்வொரு முஸ்லிம் கல்வி அதிகாரி நியமனம் செய்யப்பட வேண்டும். இது குறித்து வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment
Post a Comment