'கனவு மெய்ப்படுகின்றது'





வி.சுகிர்தகுமார் 0777113659 


 மூளையினை ஊடுருவுவது எப்படி? என்பதை அறிந்து கொள்ளும் 'கனவு மெய்ப்படுகின்றது' எனும் தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (30) நடைபெற்றது.

பெண்கள் மேம்பாட்டு அமையம் மற்றும் கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் அனுசரணையோடு கனவு மெய்ப்படுகின்றது அமைப்பின் ஸ்தாபகர் மனித உரிமை செயற்பாட்டாளர் திருமதி நளினி ரெட்ணராஜா ஒருங்கிணைப்பில் கனவு மெய்ப்படுகின்றது குழுமத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வு முற்றும் முழுதாக இலவசமாக நடாத்தப்பட்டது.

இச்செயலமர்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன் ஆறுமுகம் கலந்து கொண்டதுடன் முதன்மை பேச்சாளராக கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் மாகாண லயன் கழக தலைவருமான கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரனும் சிறப்பு அதிதியாக மனித மற்றும் சமூக உரிமை சிரேஷ்ட ஆய்வாளர் சதிவேல் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

சிந்தனைகளை மாற்று உன் வாழ்க்கை மாற்றும் எனும் கருப்பொருளுக்கு அமைய இடம்பெற்ற இச்செயலமர்வில் முதன்மை அதிதியின் உரையின் போது பல்கலைக்கழகத்தில் நுழைகின்ற மாணவர்களின் மனநிலை தொடர்பிலும் அவர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கிடைக்கும் வாய்;ப்பினை அவர்கள் முறையாக பயன்படுத்தாமல் இருப்பது தொடர்பாகவும் எடுத்துரைத்தார். மேலும் இது போன்ற செயலமர்வுகள் மாணவர்களின் மனநிலையில் மாற்றத்ததை உண்டுபண்னும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் பின்னராக வளவாளரான திருமதி நளினி ரெட்ணராஜா கருத்துரைக்கையில் சிந்தனைகளை மாற்று உன் வாழ்க்கை மாறும் எனும் என்பதோடு மனிதனால் அடக்கிய ஆளக்கூடியது அவனது சிந்தனைகள் மட்டுமே என கூறினார்.

கற்பனைகளை நிஜமாக்க கூடிய ஆற்றல் மனிதனுக்கு இருக்கின்றது. அந்த ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி மனிதன் மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ரசித்து வாழ மூளையை ஊடுருவ வேண்டும் எனவும் அவ்வாறு ஊடுருவும் இலகுவான வழிமுறைகள் தொடர்பாகவும் விரிவான விளக்கமளித்தார்.

நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து மத தலைவர்கள் அரச உயர் அதிகாரிகள் கல்விமான்கள் சட்டத்தரணிகள் வைத்தியர்கள் ஆசிரியர்கள் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வை விரிவுபடுத்தி அனைவரும் பயன்பெறும் வகையில் நடாத்த வேண்டும் என கலந்து கொண்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.