குடிநீர் இணைப்பு பெற்றுக்கொடுக்கும் பரீட்சார்த்த ஆரம்ப நிகழ்வு




 


(சுகிர்தகுமார்) 0777113659  


 குடியேற்றம் இடம்பெற்ற காலமுதல் இன்று வரை பலவருடகாலமாக குடிநீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கி வந்த அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் பழம்பெரும் கிராமமான அலிக்கம்பை கிராமத்திற்கு குடிநீர் இணைப்பு பெற்றுக்கொடுக்கும் பரீட்சார்த்த ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஒத்துழைப்போடு எகெட் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையோடும் வின்சென்றிபோல் சொசைட்டி உள்ளிட்ட பல்வேறு நிதி உதவியாளர்களின் நிதிப்பங்களிப்போடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் அனுமதியோடும் குடிநீர் இணைப்பு பெற்றுக்கொடுக்கும் பரீட்சார்த்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அலிக்கம்பை புனித சவேரியர் தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு மில்பர் வாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிதிப்பங்களிப்பை வழங்கியவர்களின் சார்பில் ஜெராஜ் சிட்டி கலந்து கொண்டதுடன் எகெட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் மற்றும் அலிக்கம்பை சென்செவேரியர் தேவாலயத்தின் உதவிப்பங்குத்தந்தை டெஸ்மன்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
குடிநீர் இணைப்பு பெற்றுக்கொடுக்கும் பரீட்சார்த்த ஆரம்ப நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர். இதன் பிற்பாடு ஆசீர்வாத பூஜையும் நன்றி கூறும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து நிதிப்பங்களிப்பை வழங்கியவர்களின் சார்பில் ஜெராஜ் சிட்டி கலந்து கொண்டு குடிநீர் இணைப்பை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த கிராமத்தில் வசித்து வரும் 360 குடும்பங்களும்; ஆற்று நீர் மற்றும் வாய்க்கால் மூலமாக கிடைக்கும் நீரினை ஆரம்ப காலத்தில் பயன்படுத்தினர். பின்னர் பிரதேச சபையின் மூலமும் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் மூலமும் கிடைக்கப்பெற்ற நீரினை பயன்படுத்தினர். ஆயினும் குடியேற்ற காலத்தின் பின்னர் முதல் முறையாக குடிநீர் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்டமையிட்டு பெருமகிழ்ச்சி வெளியிட்டனர்.
இதேநேரம் பங்குத்தந்தை உள்ளிட்டவர்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் எகெட் கரிதாஸ் நிறுவனம் நிதி உதவி வழங்கிய வின்சென்றிபோல் சொசைட்டி உள்ளிட்ட பல்வேறு நிதி அனுசரைணயாளர்கள் ஒத்துழைப்பு வழங்கிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் பிரதேச சபை செயலாளர் சுரேஸ்ராம் ஆகியோருக்கும் நன்றி கூறினர்.