தரமுயர்த்தப்பட்டுள்ளது





 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு. ஜி.திஸாநாயக்க அவர்களின் 2023.07.04 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் 2023.04.24 ஆம் திகதி தொடக்கம் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு கொண்ட 1C பாடசாலையாக  தரமுயர்த்தப்பட்டுள்ளது.  

கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் தலைமையிலான வலய மட்ட குழுவின் பரிந்துரைகளை அடுத்து கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையிலான குழுவினர் வழங்கிய சிபாரிசின் அடிப்படையில் உயர்தரம் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுனாமியால் முழுமையாக பாதிக்கப்பட்ட இப்பாடசாலை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மீளுருவாக்கம் செய்யப்பட்டு இலங்கை கல்வியமைச்சின் முழுமையான ஒத்துழைப்புடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் தலைமையிலான பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள் பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் ஆகியோரின் அயராத முயற்சியின் பயனாக பாடசாலை இந்த அடைவை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.