மஹா கும்பாபிஷேகம்




 


வி.சுகிர்தகுமார்  


 கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று வாச்சிக்குடா திருவருள்மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன நவகுண்டபஷ அஷ்டபந்தணப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இம்மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஆஞ்சநேயரின் திருவருளும் குருதேவர் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பூரண ஆசீர்வாதத்துடன் ஸ்ரீஹனுமன் தாசர் ஸ்ரீ ராம்ஜி சுவாமிகளின் குரு ஆசிகளும் கை கூடியுள்ளது.
05ஆம் திகதி கருமாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான கும்பாபிசேக கிரியைகள் 06 ஆம் திகதி இடம்பெறும் குரு பூஜை உள்ளிட்ட வழிபாடுகளுடனும் 07ஆம் காலை முதல் 08ஆம் திகதி பிற்பகல் 4 மணிவரை இடம்பெறுகின்ற எண்ணெய்க்காப்பு சாத்தும் வழிபாடுகளுடனும்; 09ஆம் திகதி காலை 8.42 மணிமுதல் 10.20 மணிவரையுள்ள சுபநேரத்தில் கும்பாபிசேக குடமுழுக்கு பெரும்சாந்தி இடம்பெறவுள்ளது.
ஆலய வரலாறு
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது சான்றோர் வாக்கு. அந்த அளவிற்கு ஆலயத்தின் முக்கியத்துவம் உணரப்பட்ட மதம் இந்துமதம். இந்து மதத்தின் சிறப்பிற்கும் உயர்விற்கும் அடிப்படையாக அமைவது ஆலயங்கள். ஆன்மாக்கள் இறைவனோடு லயிக்கின்ற இடமும் அந்த இறைவன் உறைந்திருக்கின்ற இடமும் ஆலயம். அத்தகைய ஆலயங்கள் அமையப்பெறுவதென்பது சாதாரண விடயமல்ல.
அவ்வாறு அமையப் பெற்றதில் ஒன்றே அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம். இலங்கையில் பல ஆஞ்சநேயர் ஆலயங்கள் இருந்தாலும் ஜந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் திருக்காட்சி தரும் ஸ்ரீPராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் கற்சிலை அமைந்துள்ள ஆலயம் இது ஒன்றே என்பதே இங்கு சிறப்பு. இவ்வாலயத்தை அமைப்பதில் கால்கோலாக செயற்பட்டவர் அமரர் நல்லதம்பி கந்தசாமி என்பதுடன் தற்போது ஆலயத்தை பாரமரித்து பூஜை வழிபாடுகளை செய்து வருபவரும் நல்லதம்பி கந்தசாமி என்பது இறையருளுடன் கூடிய இன்னுமொரு அதிசயமாகும்.
இப்பெருமைமிகு ஆலயமானது குருதேவர் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பூரண ஆசீர்வாதத்துடன் ஸ்ரீஹனுமன் தாசர் ஸ்ரீ ராம்ஜி சுவாமிகளின் குரு ஆசிகளுடன் அமைக்கப்பட்டதுடன்  ஆலயத்தில் வருடந்தோறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.