வாழ்த்துக்கள்!







மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் குற்றவியல் நியாயமும் நிர்வாகமும் (Criminal Justice Administration) துறையில் சித்தியடைந்து முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் அண்மை யில் இப்பட்டடம் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


கற்ற கல்வி மூலம், பிறந்த அட்டாளைச்சேனை மண்ணுக்கு பெருமைத் தேடிக் கொடுப்பவர்கள் பட்டியலில், நீதிபதி அப்துல்லாஹ்வும் ஒருவர். அந்தவகையில் இச்செய்தி அட்டாளைச்சேனை மண்ணுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி மற்றும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி என்பனவற்றின் பழைய மாணவரான அவர் 1984ம் ஆண்டு புனித அல்-குர்ஆனை மனனம் செய்து, அல்ஹாபிழ் பட்டம் பெற்றார். அல்-ஆலிம் பகுதி –I பரீட்சையிலும் சித்தி பெற்றார்.


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட அப்துல்லாஹ், 1996ம் ஆண்டு LLB பட்டம் பெற்று 1997ம் ஆண்டு சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.


அதனைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு நீதவானாகப் பதவியேற்ற அவர் 2018ம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியானார். இவ்வாறான நிலையில் அவர் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

 

கல்கிஸை, மன்னார், திருகோணமலை, மூதூர், கல்முனை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் அவர் கடமையாற்றியுள்ளார்.


தான் கற்ற சட்டக் கல்வியுடன், அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் என்பனவற்றிலுள்ள நீதி நுட்பங்களைத் தேடிப்படிப்பதில் அவர் வல்லவர். சிறுவயது முதலே பன்முக ஆளுமையுடன் மிளிர்ந்த அவர் அதற்கான பல சான்றுகளை பாடசாலையிலும், பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.