மேன்முறையீடு செய்ய முடியும்




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 அரசாங்கத்தின் நலன்புரிச்சபையினால் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் தவறுகள் இடம்பெற்றிருப்பின் இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதுடன் மேன்முறையீடு தொடர்பான விண்ணப்பங்களும் அலுவலகத்தினால் வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெயர் பட்டியலில் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக கூடிய பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் வீதியினை தடை செய்யவேண்டாம் எனவும் தங்களது கோரிக்கையினை பிரதேச செயலகத்தில் முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிணங்க பிரதேச செயலகம் உள்ளே சென்ற பொதுமக்கள் சிலர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகுதியற்றவர்களும் நலன்புரி கொடுப்பனவு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் தெரிவித்தனர்.
இதனை கேட்டறிந்து கொண்ட பிரதேச செயலாளர் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் எதிர்வரும் திங்களன்று பிரிவு ரீதியாகவுள்ள கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் காரியாலயத்திற்கு சென்று தங்களது மேன்முறையீட்டினை கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தபோதிலும் சிலர் பிரதேச செயலகத்தை விட்டு வெளியே செல்லாது அங்கு தரித்திருந்ததுடன் பின்னர் கலைந்து சென்றனர்.