மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிரேஷ்ட அரசியல் - தொழிற்சங்க வாதியான 'மனிதருள் மாணிக்கம்' என போற்றப்படும் அமரர். அப்துல் அஸீல் அவர்களின், மகனான அஷ்ரப் அசீஸ் இன்று (16.06.2023) அதிகாலை காலமானார் .
அஷ்ரப் அசீசும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தவர். அசீஸ் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை நிறுவி, அதன் ஊடாக அரசியல், தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்தவர்.
உடல்நலக்குறைவால் சில வருடங்களாக அவர் செயற்பாட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை. கொழும்பு, பம்பலப்பிட்டியவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை காலமானார்.
அவரின் ஜனாசா கொழும்பு, தெமட்டகொடை, குப்பியாவத்த முஸ்லிம் மையவாடியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மலையக வரலாறு குறித்து பேசும்போது அசீஸ் அவர்களின் குடும்பத்தை மறந்து - கடந்துபோக முடியாது.
1939 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானபோது ஆரம்பகால அங்கத்தவராக இடம்பிடித்தவர் அசீஸ். காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவியையும் அலங்கரித்தவர். தொண்டமான் அணியுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக காங்கிரஸ் இருந்து வெளியெறி
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார். ( அந்த தொழிற்சங்கம் தற்போது மனோ அணியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது)
மலையகத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் உலுக்கிய 1966 ஆம் ஆண்டில் சுமார் 45 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பஞ்சப்படி போராட்டத்துக்கு அசீஸே அறைகூவல் விடுத்திருந்தார். சம்பள நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர்தான் அசீஸ்.
தந்தைபோல் தீவிர நடவடிக்கையில் அஷ்ரப் அசீஸ் ஈடுபடாதபோதிலும், அவரின் உடலில் இறுதி மூச்சு இருக்கும்வரை, மலையக மக்களுக்காக அவரின் குரல் ஒலித்துகொண்டே இருந்தது.
ஆத்தா இளைப்பாறட்டும்.
ஆர்.சனத்
Post a Comment
Post a Comment