ஜனாதிபதி சட்டத்தரணி #திரு_மு_சிற்றம்பலம் அவர்கள் காலமானார்.
சட்டவல்லாளர், சமூகக் காவலர்
முருகேசு சிற்றம்பலம் அவர்கள் மறைவு !
ஜனாதிபதி சட்டத்தரணியும் மூத்த தமிழ்த் தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களின் சகோதரருமான மு. சிற்றம்பலம் அவர்கள் காலமானார் என்று கிடைத்த துயரச் செய்தி சட்டத்துறை சார்ந்தோருக்கும் வவுனியா மக்களுக்கும் பெரியதோர் இழப்பாகும்.
அவர் பிறந்த கரவெட்டிக் கிராமத்துக்கும் அது ஒரு துயரமான பிரிவாகிவிட்டது.
தமையனார் சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் நிகழ ஆயத்தங்கள் நடைபெறும் வேளையில் தம்பியார் எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சனநாயக அரசியற் சூழலிலும் ஆயுதப் போராட்ட காலத்திலும் வவுனியா மண்ணில் அவர் ஆற்றிய சட்ட , சமூகப் பணிகள் அளப்பரியவை.
1960 களில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்த இவர், கடந்த 50 ஆண்டு காலமாக சட்டத் தொழிலைச் சிறப்புறச் செய்தவர்.
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக நற்பணியாற்றியவர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரான அவர்
எல்லைக் காவலர் என்று அழைக்கப்பெற்ற முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் அமரர். த.சிவசிதம்பரத்தின் தூணாக இயங்கியவர்.
1976 ட்ரயல் அற் பார் வழக்கில் தமிழ்த்தலைவர்களுக்காக ஆஜரான 52 சட்டத்தரணிகளில் ஒருவர்.
அதுபோல பல வழக்குகளில் இளையோர்களுக்காக ஆஜரானவர்.
1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்று, அவை அறிமுகமானபோது கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று வவுனியா மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவராகத் தெரிவானவர்.
வவுனியா பிரசைகள் குழுத்தலைவராக இடர்க்காலத்தில் நற்கருமமாற்றியவர்.
எண்பது ,தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் வழியில் கைதாகி தடுப்புக்காவலில் இளைஞர்களும் பயணிகளும் தடுத்து வைக்கப்படும் சம்பவங்களின்போது அவர்களுக்காகத் - தமது சட்ட உதவியை வழங்கியவர்.
சில வருடங்களுக்கு முன்னர், வவுனியாவில் இவரது ஐம்பது வருட நீதிச்சேவையைப் பாராட்டி, வவுனியாப் பொதுமக்களால் விழா எடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
மறைந்த ஊடகர் அமரர் மாணிக்கவாசகம் தலைமையில் அந்த விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் பி.பி.சி முதல் அனைத்துலக ஊடகங்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் அடிக்கடி குரல் தரும் ஒருவராகவும் செய்திகளில் மேற்கோள் காட்டப்படும் ஒருவராகவும் திகழ்ந்தவர்.
தமது சட்டத் தொழிலைச் சமூக நலன்பேணும் தொழிலாகப் பேணியதால், பொது மக்களின் அனைத்து மட்டங்களிலும் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.
பல பதவிகளை வகித்தபோதிலும் ஊருக்கு வந்தால் சைக்கிளில் திரியும் எளிமை அவரின் ஆளுமை மாதிரியின் சிறப்பாகும் !
முருகேசு சிற்றம்பலம் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக!
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும்-பணிபுரிந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment