உலகிலேயே மிகப் பெரிய சீறுநீரகக் கல்லை, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி, கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளதாக இலங்கை ராணுவ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருப்பது உறுதிசெய்யப்பட்டு, கடந்த ஜூன் முதலாம் தேதி ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதில், 801கிராம் எடையுடன் கூடிய 13.37செ.மீ. நீளமுள்ள சிறுநீரகக் கல் அகற்றப்பட்டது.
கொழும்பு ராணுவ மருத்துவமனையின் சிறுநீரக பிரிவின் தலைவர் சிறப்பு மருத்துவர் லெப்டினன் கேணல் டாக்டர் குகதாஸ் சுதர்சன் தலைமையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘நோயாளியின் உயிரைப் பாதுகாப்பதே சவலாக இருந்தது’
அறுவை சிகிச்சையின்மூலம் அகற்றப்பட்டச் சிறுநீரகக்கல்
இதையடுத்து, அகற்றப்பட்டச் சிறுநீரக கல், இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் காண்பிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக சிகிச்சையை நடத்திய ராணுவ மருத்துவ குழாமிற்கு, ராணுவ தளபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர், சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது.
சிறுநீரகக் கல் என்பது என்ன? அது வராமல் தடுப்பது எப்படி?
31 டிசம்பர் 2022
இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு சிறுநீரக நோய்: அறிகுறிகள் என்ன? எப்படி தவிர்ப்பது?
11 மார்ச் 2023
ஒருவரின் மூளையை மாற்றி புதிய மூளையை பொருத்த முடியுமா?
12 ஜூன் 2023
சிகிச்சையின் போது, எதிர்கொண்ட சவால்கள் குறித்து, லெப்டினன் கேணல் டாக்டர் குகதாஸ் சுதர்சன் பிபிசி தமிழிடம் பேசினார்.
குறித்த நோயாளியைப் பாதுகாப்பதே மிகப்பெரிய சவாலாக காணப்பட்டது என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தச் சிறுநீரக கல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த கல்லை அப்புறப்படுத்தும் போது எதிர்கொள்ளக்கூடிய பின்விளைவுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
‘சிறுநீரகத்தை வெளியே எடுக்கவேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கக்கூடும்’
சிறுநீரக பாதிப்பு, அதிக இரத்த போக்கு உள்ளிட்ட சவால்களும் இருந்தன
அதேபோன்று, அறுவை சிகிச்சையின் போது சிறுநீரக பாதிப்பு, அதிக இரத்த போக்கு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், சில வேளைகளில் சிறுநீரகத்தை வெளியே எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படக்கூடும் என்ற சவாலும் காணப்பட்டதாக டாக்டர் குகதாஸ் சுதர்சன் மேலும் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான சவால்களை நிவர்த்தி செய்துக்கொள்ளும் வகையில், முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னதாகவே, அவசர சிகிச்சை பிரிவையும் தாம் தயார் நிலையில் வைத்திருந்ததாக லெப்டினன் கேணல் டாக்டர் குகதாஸ் சுதர்சன் தெரிவிக்கின்றார்.
'போர் சமயத்தில் குடிநீர் கிடைக்காததால் வந்த பிரச்னை'
சிறுநீரகக்கல், அறுவை சிகிச்சை, இலங்கை ராணுவம்
பட மூலாதாரம்,SRI LANKA ARMY
படக்குறிப்பு,
சிகிச்சை பெறுவதில் ஏற்பட்டத் தாமதமும் கல் வளர்ச்சியடைய ஒரு காரணம் என மருத்துவர்கள் கூறினர்
இந்த நோயாளிக்குப் பெரிய சிறுநீரக கல்லொன்று இருப்பதை அறிந்தவுடன், அதனை அப்புறப்படுத்துவதற்கு இரண்டு வார கால தயார்ப்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டு, பின்னரே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நோயாளி எவ்வாறான பிரச்னைகளை எதிர்நோக்கியிருந்தார் என நாம் மருத்துவரிடம் வினவியிருந்தோம்.
''அவருக்கு பிரதானமாக வயிற்றின் வலது பக்கத்தில் வலி இருந்தது. அதைவிட, சிறுநீர் கழிப்பின் போது சிறு சிறு பிரச்னைகள் காணப்பட்டது. அந்த வலி காரணமாகவே அவர் இந்த மருத்துவமனைக்கு வருகை தந்தார்," என அவர் பதிலளித்தார்.
குறித்த நோயாளி, 2019ம் ஆண்டு காலப் பகுதி வரை ராணுவத்தில் கடமையாற்றி, தற்போது ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ உறுப்பினராவார்.
குறிப்பாக இவர் ராணுவத்தில் கடமையாற்றிய காலப் பகுதியில், அவர் பணிபுரிந்த பகுதியே இந்த சிறுநீரக கல் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
22 வருட காலமாக, குறித்த ராணுவ உறுப்பினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றியுள்ளதுடன், யுத்த காலத்தில் பணியாற்றிய போது அவருக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவுகள் சரியான முறையில் கிடைக்காமையும் இந்த சிறுநீரக கல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார்.
சாதாணரமாக ராணுவ வீரர் ஒருவருக்கு ஏற்படும் பிரச்னைகளையே இவரும் எதிர்நோக்கியுள்ளதாகக் கூறிய அவர், சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பட்ட தாமதமும் இந்த கல் வளர்ச்சியடைய காரணம் என குறிப்பிட்டார்.
கின்னஸ் சாதனைக்கான ஆயத்தங்கள்
சிறுநீரகக்கல், அறுவை சிகிச்சை, இலங்கை ராணுவம்
பட மூலாதாரம்,SRI LANKA ARMY
படக்குறிப்பு,
கின்னஸ் சாதனையை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களும் தமக்கு பெரிய சவாலாக அமைந்தது என மருத்துவர்கள் கூறினர்
கின்னஸ் சாதனையை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களும் தமக்கு பெரிய சவாலாக அமைந்தது என மருத்துவர் சுதர்சன் கூறுகின்றார்.
அறுவை சிகிச்சையை தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்தல், படங்களை எடுத்தல் மற்றும் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியாத மருத்துவர்களை அழைத்து வந்து, ஆதாரங்களை திரட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் தமக்கு சவாலாக அமைந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான சவால்களை எதிர்நோக்கியே, தாம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, கின்னஸ் சாதனையை நிலைநாட்டியதாக அவர் தெரிவிக்கின்றார்.
2004 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கு பின்னரான காலப் பகுதியில் பாரிய இரண்டு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதற்குமுன் அகற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய சிறுநீரகக்கற்களைவிட இப்போது இலங்கையில் அகற்றப்பட்ட இக்கல் பெரியது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்
உலகிலேயே மிக நீளமான சிறுநீரக கல் இதற்கு முன்னர் இந்தியாவில் அகற்றப்பட்டிருந்தது.
இந்தியாவில் 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை ஒன்றின் ஊடாக அகற்றப்பட்ட சிறுநீரக கல்லின் நீளமானது 13 சென்ட்டிமீட்டர் என கின்னஸ் உலக சாதனையில் பதிவாகியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.
அதேபோன்று, உலகிலேயே அதிக எடையை கொண்ட சிறுநீரகக் கல் பாகிஸ்தானில் அகற்றப்பட்டிருந்தது.
2008ம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை ஒன்றின் மூலம், உலகிலேயே அதிக எடைக் கொண்ட சிறுநீரக கல் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், அதிக நீளமான மற்றும் அதிக எடைகொண்ட சிறுநீரக கல் தற்போது இலங்கையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகத்தில் அதிகமான தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர்
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர்.
பெரும்பாலான சமயங்களில் இதற்கு எந்த அறிகுறியும் இருக்காது. ஸ்கேன் எடுக்கும்போதுதான் தெரியவரும். சிலருக்கு சிறுநீர் வெளியாகும்போது அதில் கல்லும் வெளியேறும். அப்போது வலி ஏற்படும். அந்த வலி பின் வயிற்றிலிருந்து பரவி வரும். சிலருக்குச் சிறுநீரில் ரத்தமும் வெளியேறலாம்.
சிறுநீரகக்கற்கள் வராமல் தடுப்பதற்கு உணவை முறைப்படுத்துவதுதான் ஒரே வழி. பிரதானமாக உப்பு. நாள் ஒன்றுக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு சேர்த்துக்கொள்ளக் கூடாது. நிறைய தண்ணீர் பருக வேண்டும். புரதச்சத்துக்காக இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை விட பயிறுகள், பருப்பு உள்ளிட்ட சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், என்று சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Post a Comment
Post a Comment