வைர விழாக் கொண்டாடும் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர் - றஹீமியா வித்தியாலயம்.
(1963-2023)
- எஸ் சினீஸ் கான்
அறிமுகம்
60 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிய அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையே தற்போது அக்/ அர் - றஹீமியா வித்தியாலயமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன் வைர விழா 01-07-2023 ல் கொண்டாடப்படுகிறது.
தோற்றம்
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மேற்கும் புறத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் பட்டியடிப்பிட்டி கிராமமாகும். இக் கிராமம் உருவாகிய பிற்பாடு இவ்வூரின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக பாடசாலை ஒன்றை உருவாக்கும் தேவை அக்கிராம மக்களுக்கு உருவாகியது.
பட்டியடிப்பிட்டி கிராம மக்களின் கல்வி, சமூக அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் எஸ்.எச்.வீ அப்துல் றஹீம் ஹாஜியார் தனக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் காணியினை இலவசமாக வழங்கினார். ஆரம்பத்தில் ஓலைக்குடிசையினால் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயருடன் தரம் 1 முதல் தரம் 5 வரை ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் அதிபராக ஜனாப் மர்ஹும் அபுசாலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு கிராம மக்களுடன் இணைந்து பெரும் பங்காற்றினார். முதன் முதலாக 1974 கட்டிடம் ஒன்று இப்பாடசாலைக்கு கிடைத்தது.
பின்னர் 10-11-1978 ம் திகதி இதன் பெயர் அக்/ அர் - றஹீமியா வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது தரம் 1 முதல் தரம் 9 வரை சிறப்பாக பல சாதனைகள் படைத்து இயங்கி வருகிறது.
பாடசாலையின் வளர்ச்சி.
இந்த பாடசாலையில் இதுவரையில் சுமார் 2000 மாணவர்கள் வரையில் கல்வி கற்றிருக்கிறார்கள். இதுவரையில் தரம் 5 புலமைப்பரீட்சை பரீட்சை பரீட்சையில் சுமார் 50 மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்திருக்கிறார்கள். தற்போது பாடசாலையில் 17 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் 240 மாணவர்களும் கல்விபயிலுகின்றனர். இப்பாடசாலை பாடசாலை மாணவர்கள் பாடசாலை, வலய மட்ட, மாகாணமட்ட போட்டிகளில் பங்குபற்றி சாதனைகள் படைத்திருப்பதும் சிறப்பம்சமாகும்.
அதேபோல் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொண்டிருப்துடன் சிலர் வைத்தியர்களாக, ஆசிரியர்களாக, ஏனைய பல அரச, தனியார் துறையில் பதவிகளை வகிப்பதுடன் சமூகத்தின் வளச்சிக்கும் பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அதிபர்கள், ஆசிரியர்களின் பணி.
இதுவரையில் எட்டு அதிபர்கள் (தற்போதைய அதிபர் உட்பட) இங்கு கடமையாற்றியுள்ளார்கள்.
இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு முன்னாள் அதிபர்களான ஜனாப் மர்ஹும் அபுசாலி, ஜனாப் மர்ஹும் நாகூர்தம்பி, அல்ஹாஜ் சாலிஹ், ஜனாப் ஏ.சி.எம் கபூர், ஜனாப் அப்துல் ரசாக், ஜனாப் எம்.ஜ அப்துல் கபூர், ஜனாப் யு.எல் சைனுடீன் மற்றும் தற்போதைய அதிபர் ஜனாபா பரீதா நிப்றாஸ் அவர்களும் இதுவரையில் இப் பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும் இப் பாடசாலை வளர்ச்சிக்கிக்கு தங்க ளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்கள். அவர்களுடைய ஆற்றல்கள், சாதனைகள் சிலாகித்து சொல்லத்தக்வை.
பெற்றோர், பழைய மாணவர்களின் பங்களிப்பு.
இப்பாடசாலையின் வளர்ச்சி, அபிவிருத்திக்கு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் தங்களால் முடிந்த பங்களிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கிவருகின்றனர்.
முடிவுரை.
இப்பாடசாலையில் கற்ற மாணவர்கள் பலர், தேசிய அளவிலும் சர்வதேச மட்டத்திலும் பல உயர் அடைவுகளைப் பெற்றுள்ளனர்.
அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், வலயத் தலைவர்கள், எண்ணற்ற ஆசிரியப் பெருந்தகைககள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், செல்வந்தர்கள், சிற்றூழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் போன்ற பலதரப்பினரது இடையறாத அர்ப்பணிப்பும் பங்களிப்புமே, இப் பாடசாலையின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பெருமளவு பங்களித்திருக்கிறது. அதனை இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறோம்.
கடந்த 60 வருட காலத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலேயே இப் பாடசாலை வளர்ந்து வந்துள்ளது.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களினதும், எண்ணற்ற உள்ளூர் மாணவர்களினதும், சமூகத்தினதும் ஒளிவிளக்காக இப்பாடசாலை திகழ்கிறது.
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர் - றஹீமியா வித்தியாலயத்தின் வைரவிழாக் கொண்டாட்டத்தில் பாடசாலை சமூகத்தினரும், ஊரவர்களும், பழைய மாணவர்களும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். இங்கு கல்வியும் கலையும் பண்பாடும் செழிக்க வேண்டும். அதற்கு இப் பாடசாலை செயலூக்கத்துடன் தொடர்ந்தும் பங்களிக்க வேண்டும் என்பதே எல்லோரதும் பிராத்தனையாகும்.
உசாத்துணை:
1. நூல் - பட்டியடிப்பிட்டிப் பிரிவின் மூலவளத் திரட்டுக்கள் - ஐ.எச் அப்துல் வஹாப்.
Post a Comment
Post a Comment