பரிகாரப் பூஜை செய்த பெண் உயிரிழப்பு




 


லக்கல, தாஸ்கிரிய, ஹத்தொட்டமுன பிரதேசத்தில் பரிகாரப் பூஜை ஒன்றின் போது சுகவீனமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 

நேற்று (16) மாலை முதல் நேற்று (17) காலை வரை இந்த பூஜை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

லக்கல, தாஸ்கிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், சுகவீனமுற்றிருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் குணப்படுத்துவதற்காக இந்த பரிகாரப் பூஜை நடாத்தப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் பூஜை செய்தவர் மூவருக்கும் தலா 21 இளநீர்களை அருந்த கொடுத்துள்ளார்.

 

இதன்போது, குறித்த பெண் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மஞ்சள் நீரை அருந்த கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அதன் பின்னர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

 

சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று (18) தம்புள்ளை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், பூஜை செய்த 25 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.