லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை பாதணிகள் வழங்கும் நிகழ்வு !
மாளிகைக்காடு நிருபர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை பாதணிகள் வழங்கும் நிகழ்வும், தெரிவு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் சந்திப்பும் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இன்று (16) நடைபெற்றது.
அவுஸ்திரலியாவில் பணிபுரியும் இலங்கை (சாய்ந்தமருது) சகோதரி ஒருவரின் உதவியினால் கிடைப்பெற்ற இந்த பாடசாலை பாதணிகள் வழங்கும் நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர், ஊடகவியலாளர் யூ.எல்.என்.நூருல் ஹுதா, பாடசாலை பிரதியதிபர் எஸ்.எம்.சுஜான், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர், பகுதித்தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், மாணவர்களின் கல்விக்கு சீருடை தடையாக இருக்க கூடாது என்ற அடிப்படையில் இந்த பாதணிகள் வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் கல்வியில் தமது முழுமையான ஈடுபாட்டை காட்டி தமது இலக்கை அடைய முழுமையாக அர்ப்பணித்து கல்வி கற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், குறித்த பாதணிகளை வழங்கிய தனவந்தருக்கு நன்றிகளை தெரிவித்த அவர், இந்த பாடசாலையின் கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றி பெற்றோருக்கு விளக்கியதுடன் பாடசாலை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் பெற்றோர்கள் கரிசனை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பெற்றோர்களின் அலட்சியமான சில நடவடிக்கைகள் பிள்ளைகளை தவறான பாதைக்கு கொண்டு செல்வதையும், இப்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையிலிருந்து தமது பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய அவசியம் மற்றும் முக்கிய பல கண்காணிப்புக்கள் தொடர்பிலும் உரையாற்றிய அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர், ஊடகவியலாளர் யூ.எல்.என்.நூருல் ஹுதா, மாணவர்களின் கல்வியில் இப்பாடசாலையின் வகிபாகம், பாடசலையின் உயர்ச்சி பாதை, அதிபர் மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழுவின் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை பாராட்டி பேசினார். தொடர்ந்தும் இந்த பாடசாலை மேம்பாட்டுக்கு பெற்றோர்களின் பங்களிப்பும், ஏனைய நலன்விரும்பிகளின் உதவிகள் தொடர்பிலும் உரையாற்றியதுடன் பாதணிகளை வழங்கிய தனவந்தருக்கு தமது நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment