நூருல் ஹுதா உமர்
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷுன்சுகே டேக்கி கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று வெளியுறவு அமைச்சில் இன்று இடம்பெற்றது.
ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று வெளியுறவுத்துறைக்கான துணை அமைச்சர் ஷுன்சுகே டேக்கியை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் போது, இலங்கை – ஜப்பான் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை இருவரும் நினைவூட்டியதுடன் எதிர்காலத்தில் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மாகாண ஆளுநர் என்ற வகையில் மாகாணத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஜப்பான் அரசு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், தங்களுடைய முயற்சியை ஜப்பான் அரசு பாரட்டுவதாகவும் ஷுன்சுகே டேக்கி செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் சிறப்பாக உள்ளதாகவும் ஐ.எம்.எப். நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கும், கடன் மறுசீரமைப்புத் திட்டங்களின் போதும் இலங்கை ஜனாதிபதியின் வழிகாட்டலின் பேரில் அர்ப்பணிப்புடன் இலங்கை நாட்டின் அதிகாரிகள் பணியாற்றியதாகவும் ஷுன்சுகே டேக்கி ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள இலங்கை வந்த வெளியுறவுத்துறைக்கான துணை அமைச்சர் ஷுன்சுகே டேக்கிக்கு சிறந்த வரவேற்பை இலங்கை அளித்திருந்தமைக்காக அவர் பாராட்டையும் நன்றியினையும் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் இரு நாடும் இணைந்து மீன்பிடித்துறையுடன் தொடர்புடைய துறைசார் தொழிலை மேம்படுத்துவது குறித்தும், கனிம வளங்கள் குறித்து ஆராய்ந்து அதனை செயற்படுத்த ஜப்பான் அரசு பங்களிப்பு அளிக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையை ஏற்று, அதற்கு சாதகமான பதிலளித்த ஷுன்சுகே டேக்கி ஜப்பான் தனது முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்தார்.
Post a Comment
Post a Comment