இறக்காமம் பிரதேச செயலகத்தினால், நடமாடும் சேவை

(நூருல் ஹுதா உமர்)
இறக்காமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை புதன் கிழமை பிரதேச செயலக கேட்போர்கூட கூட்ட மண்டபத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அதனடிப்படையில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் மேற்கொள்ளப்பட்ட சேவைகளாக இறக்காமப் பிரதேசத்தில் காணப்பட்ட சில தீர்க்கப்படாத காணிப் பிரச்சினைகள், காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கல் மற்றும் அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல், மேலும் சமூர்த்தி மற்றும் சமூக பாதுகாப்பு நலன்சார் கொடுப்பனவு வழங்குதல், பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் தொடர்பான பதிவு விடயங்கள், தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கான பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதியினைப் பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டைக்கான புதிய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளல், மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் சேவைகள், பிரதேச சபைசார் சேவைகள், நுகர்வோர் அதிகார சபைசார் சேவைகள், ஆயுர்வேத மற்றும் கால்நடை வைத்திய சேவைகள், பொதுச் சுகாதார வைத்திய சேவை, நீர்ப்பாசன சேவை மற்றும் உளவளத் துணை ஆலோசனைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் போன்ற பல சேவைகள் நடமாடும் சேவையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பல நிறுவனங்கள்சார், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றி பொதுமக்களுக்கான முடியுமான சேவையினை வழங்கியிருந்தனர். மேலும் பிரதேச செயலக மட்டத்தில் தீரக்கப்படாத பிரச்சினைகளை இனங்கண்டு, அதற்கான தீர்வை எட்டுவதற்காக மாவட்ட செயலக மட்டத்தில் இடம்பெறும் நடமாடும் சேவையில் கொண்டு செல்லப்படும் என பிரதேச செயலாளரினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அந்தவகையில் இறக்காமம் பிரதேச சபை, ஆயுர்வேத வைத்தியசாலை, மிருக வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொலிஸ் நிலையம், கோட்டக் கல்வி அலுவலகம், நீர்பாசன திணைக்களம், கமநல சேவை மற்றும் நுகர்வோர் அதிகார சபை, வீடமைப்பு அதிகார சபை, போன்ற பல திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் இன்றைய நடமாடும் சேவையில் பங்குபற்றியிருந்தமை சிறப்பம்சமாகும்.
Post a Comment